ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று வவுனியா, கோவில்குளத்தில் பகல்வேளை நடைபெற்றது. கூட்டணியின் பொருளாளரான க. துளசி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களும் ஏனைய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். கூட்டணியின் மறைந்த செயலாளர் வே. நல்லநாதருக்கு பதிலாக நா. இரட்ணலிங்கம் அவர்கள் செயலாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும், ஏனைய மாவட்டங்களிலும் கூட்டணியின் மாவட்டக் குழுக்களை விரைவாக ஏற்படுத்தும் தீர்மானமும், ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுத் தமிழ் வேட்பாளர் விடயம் குறித்து தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்துக் கட்சிகளுடனும் தமிழ் தேசியத்தில் அக்கறை கொண்டு செயற்படும் சமூக அமைப்புகளுடனும் பேச்சுக்களை ஆரம்பிப்பதெனும் தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (DTNA)யின் வவுனியா மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டமும் இன்று பிற்பகல் வேளை நடைபெற்றது. கூட்டணியின் வட மாகாண துணைத் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசுவாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாவட்டக் குழுவின் இணைப்பாளராக செ. மயூரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.