புளொட் தலைவரின் 24ஆவது வீரமக்கள் தின செய்தி

Sithar ploteஅனைவருக்கும் வணக்கம்!இலங்கையில் தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்காகவும், போராட்டத்தின் பேரிலும் தங்கள் இன்னுயிரை ஈகை செய்த அனைத்து அமைப்புகளின் தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியினை செலுத்துகின்றோம்.
மறைந்த எமது செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்களையும், தோழர்களையும், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து வீரமக்கள் தினம் கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் உயிர்நீத்த மறைந்த எங்களுடைய தோழர்கள், தலைவர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இந்த வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையானது, அவர்கள் என்ன காரணத்திற்காக தங்களுடைய உயிர்களை நீத்தார்களோ அந்த இலட்சியத்தினை அடைவதற்கு தொடர்ந்தும் புலம்பெயர் மக்கள் ஆக்கபூர்வமான உதவிகளை நல்கி வருவதற்கு ஓர் காரணியாக இருந்து வருகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டிலே இங்கு இருக்கின்ற நிலைமைகள் மிக மோசமான நிலைமைகளாக, இங்கு வாழுகின்ற தமிழ்மக்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு, வாழ்வதற்கு ஒரு வழியின்றி, வாழ்வதற்கு வீடுகளின்றி, தாங்கள் தங்கள் சொந்தக் காலிலே நிற்கக் கூடியளவிற்கு பொருளாதார வசதியின்றி, ஆயிரக்கணக்கான விதவைகள் மற்றும் தனியே பெண்களையே தலைமையாகக் கொண்ட குடும்பங்கள்; என எவ்வளவோ அல்லல்பட்டு வருகின்ற நேரத்திலே இலங்கை அரசும் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்குவதற்கு தவறிவருகி;ன்றது.
இந்த நேரத்திலே தமிழ் மக்கள் மத்தியிலே ஒரு சரியான ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றி வருகின்றோம். புலம்பெயர் தமிழர்களும்கூட தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலே அக்கறை காட்டுகின்ற அதேவேளையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை இரண்டு பகுதிகளாகப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கான ஒரு நிரந்தரத் தீர்வு, அதேநேரத்திலே இன்று வாழவழியின்றி தவிக்கின்ற மக்களுக்கான ஒரு உதவித் திட்டம் அதாவது இந்த மக்களை வாழவைப்பதற்கான வழிவகைகள் செய்வது.
ஆகவே இவை இரண்டிலுமே நாங்கள் கண்ணும்கருத்துமாறு செயற்பட வேண்டும். இந்த மக்களை வாழ வைப்பதற்கு உண்மையிலேயே புலம்பெயர் மக்கள் ஒட்டுமொத்தமாக விரும்பினால் இந்த மக்களுடைய பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் சரியான வழியிலே தீர்த்துவிட முடியும் ஏனென்றால் இவர்கள் பலபல கோடி ரூபாய்களை யுத்த காலத்திலே யுத்தத்திற்கு கொடுத்திருந்தார்கள். அதேபோல இன்று இந்த மக்களை வாழவைப்பதற்காக அவர்கள் கொடுத்துதவ வேண்டும். அவர்கள் இங்கு தங்களுடைய, தங்களுக்குத் தெரிந்த ஊர்கள், தங்களுக்குத் தெரிந்த குடும்பங்கள் என நேரடியாக உதவுவதன் மூலமே மிகப்பெரிய அளவிலே அந்த குடும்பங்களை வாழவைக்க முடியும்.
இந்த உதவிகளை யாருக்கு அனுப்புவது எப்படி அனுப்புவது யாருக்கூடாக அனுப்புவது எந்த அமைப்புகளுக்கு ஊடாக வழங்குவது என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. நேரடியாகவே உதவுங்கள். வருங்காலங்களிலே நாங்கள் எங்களுடைய கூட்டமைப்பு மூலம் ஒரு அமைப்பினை உருவாக்கி அந்த அமைப்பின் ஊடாக இவைகளை நாங்கள் செய்யக்கூடியதாக வருகின்றபோது அந்த அமைப்புக்கு நீங்கள் உங்கள் உதவிகளைச் செய்கிறபோது அந்த அமைப்பு நிச்சயமாக இந்த மக்களுடைய கஷ்ரங்களை நிவர்த்தி செய்யும்.
ஆகவே இன்று நீங்கள் இந்த மக்களுக்குச் செய்யக்கூடிய உதவி அவர்களை வாழவைப்பதே. அத்துடன் ஒரு சரியான நியாயமான அரசியல் தீர்வை நோக்கிப் போவதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது. இதுதான் நாங்கள் இழந்த தோழர்களுடைய, போராளிகளுடைய, பொதுமக்களுடைய ஆத்மாக்களுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

நன்றி தர்மலிங்கம் சித்தார்த்தன்,தலைவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,06.07.2013.