05.07.2013.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி சந்திப்பு-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும், மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை 5மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், எம்.பத்மநாதன் ஆகியோரும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் உபதலைவர் வீ.இராதாகிருஷ்ணன், செயலாளர் லோரன்ஸ், சுப்பிரமணியம், கிருஷ்ணா, அரவிந்தகுமார் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றியும் அதனை மாற்றியமைக்கும் முயற்சிகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் 13ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கும் தீர்மானத்திற்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவாக வாக்களிக்கக் கூடாது அல்லது வாக்களிப்பிலிருந்து விலகி நிற்க வேண்டுமென்று கூட்டமைப்பு தரப்பில் கோரப்பட்டது. இங்கு கருத்துரைத்த மலையக மக்கள் முன்னணி பிரதிநிதிகள், 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக இல்லாதநிலையில் அதிலும் சிலவற்றைப் பறிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 13ஐ மாற்றியமைக்கும் எந்த தீர்மானத்திற்கும் நாங்கள் ஆதரவாக வாக்களிக்க மாட்டோமென்று கூறியதுடன், தங்களுக்கு அழுத்தங்கள் பெரியளவில் இருக்கின்ற நிலையிலும், 13ஐ மாற்றியமைக்கும் தீர்மான வாக்கெடுப்பின்போது விலகி நிற்போம் அல்லது தேவையேற்படின் எதிர்த்து வாக்களிப்பொமென்று தெரிவித்தனர்.