கறுப்பு யூலையின் 30ம் ஆண்டு நினைவுதினம்-

images 4கறுப்பு யூலையின் 30ம் ஆண்டு நினைவுதினம் நேற்று முன்தினம் 23ம் திகதிமுதல் நாளை மறுதினம் 27ம்திகதி வரையான ஐந்து நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ்அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான  தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் வருடாவருடம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை-கலாநிதி மன்மோகன்சிங்-

இலங்கையின் மீளமைப்பு மற்றும் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு விடயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று இந்தியப் பிரதமர் கலாநிதி மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்hளர். ஒரே இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்குளுக்கான அரசியல் தீர்வினை வழங்குவதற்கு இந்தியா இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் 13ம் திருத்தச்சட்டத்தை மாற்றி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையியே மன்மோகன்சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல்-

வட மாகாணசபை தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கட்சியினால் யாழ். மாவட்டத்திலேயே இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் பி.ஜிதயானந்த போட்டியிடுகின்றார். இந்த வேட்புமனு இலங்கை தொழிலாளர் கட்சியின் முதன்மை வேட்பாளரினால் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் பி.ப 1.05 மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஒருபடி மேல் சென்று தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும்-சோமவன்ச-

இலங்கையின் அரசியலமைப்பு சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான, இனவாத அரசியலமைப்பாகும். இதனை தற்போதைய அரசாங்கம் முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது. உரிய உரிமைகள் உள்நாட்டில் வழங்கப்படாத நிலையில், தமிழர்கள் இந்தியாவிடமோ, ஏனைய சர்வதேச நாடுகளிடமோ செல்வதை குறைகூற முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உரிய பாடம் புகட்ட வேண்டுமாயின் இந்தியா வலியுறுத்துவதைவிட ஒருபடி மேல்சென்று தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அப்போது சர்ச்சைக்குரிய இலங்கை – இந்திய ஒப்பந்தமும் தானாக இரத்தாகிவிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை-

வட பகுதியிலுள்ள 13 இராணுவ முகாம்களை ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள 13 சிறிய முகாம்களிலுள்ள இராணுவத்தினர் பலாலி பிரதான இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே மூன்று பிரதான முகாம்கள் உட்பட 16 முகாம்கள் யாழில் இயங்கி வருகின்றன. யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது இயல்புநிலை திரும்புவதையடுத்து சிறிய படைமுகாம்களை அகற்ற இராணுவதட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. 13 இராணுவ முகாம்கள் இயங்கி வருகின்ற கட்டடங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிகேடியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை கண்காணிக்க சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கண்காணிப்பதற்காக மூன்று சர்வதேச கண்காணிப்பாளர் அமைபுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்துள்ளார். ஆசிய தேர்தல்கள் அதிகாரிகள் அமைப்பு, தேர்தல்கள் முகாமைத்துவம் தொடர்பான தெற்காசிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் அமைப்பு ஆகியவற்றுக்கு எழுத்துமூல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதற்கமைய இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு- வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் நேற்று தனது வீட்டு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 17வயதான சுப்பிரமணியம் பத்மயோகா என்ற மாணவியே கிணற்றுக்குள் குதித்து மரணமடைந்துள்ளார். இம்மரணம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோஸ் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்-

ஈரோஸ் என்கிற ஈழவர் ஜனநாயக முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில் ஈரோஸ் ஏர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.