ஐநா குழுவுக்கான அனுமதியை நாடாளுமன்றமே முடிவு செய்யும்

aryasinghஇலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொலன்னறுவையில் ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை அடுத்து, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்ததை அடுத்தே மகிந்த ராஜபக்ஷவின் இந்தக் கருத்து வந்துள்ளது. இதனிடையே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு தாம் தாங்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஜெனீவாவிலுள்ள ஐ நா அலுவலங்களுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆரியசிங்க அறிவித்துள்ளார். உள்நாட்டில் இணக்கப்பாடு, பொறுப்புக் கூறுதல், தேசத்தை கட்டியெழுப்புவது போன்ற நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும், இலங்கை மக்களின் நலன் குறித்து உண்மையாக ஆர்வம் கொண்டுள்ள நாடுகள், பன்னாட்டு அமைப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து தாங்கள் செயல்பட்டு வருவதாக அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று இலங்கைத் தூதரின் அறிக்கை கூறுகிறது. ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரது முன்னெடுப்பு, காழ்ப்புணர்ச்சி மிக்கது, நாட்டில் உருவாக்கப்பட்டுவரும் தேசிய இணக்கப்பாடு குந்தகத்தை ஏற்படுத்தும் அவர்களின் முன்னெடுப்பு சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, தொடர்ச்சியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. அந்தத் தீர்மானம் தெளிவில்லாமல் இருப்பதால், அது அபாயகரமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என இலங்கைத் தூதர் கூறுகிறார். இலங்கையில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன போதிலும், தீவிரவாதம் மற்றும் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை ‘மனித உரிமைகள் மீறல்கள்’ குறித்து விசாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையின் மூலமே உண்மைகள் தெரியவரும் என நவநீதம்பிள்ளை தொடர்ந்து வாதிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபை இணையத்தளம் திருட்டு

untitledவடமாகாண சபையின் உத்தியோக பூர்வ வலைதளமான றறற.np.பழஎ.டம  என்ற இணையத்தளம் ‘ஹேக்’ திருடப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை (06) ஹேக் செய்யப்பட்டு இயங்காது இருந்த நிலையில் மீண்டும் இயங்கியது. இந்நிலையிலேயே மீண்டும் அந்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த பொழுது குறித்த இணையத்ளத்;தினை உபயோகப்படுத்துவது ஆளுநர் அலுவலகம் ஆகையினால் அவர்களிடம் கேட்குமாறு கூறினார். இது தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது வடமாகாண ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.

கபடிப் போட்டிகளில் பங்குபற்ற இரு அணிகளுக்கு தடை  .

imagesCALOFTBZவடமாகாணக் கபடிப் போட்டிகளிலிருந்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினையும் வவுனியா பரக்கும் குளம் மகா வித்தியாலய அணியினையும் நீக்குவதாக வட மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்துள்ளார். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மே மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற 19 வயதுப் பிரிவு ஆண்கள் கபடிப் போட்டி இறுதிச் சுற்றில் இரு வீரர்களுக்கிடையில் முரண்பாடு வரவே, இரு அணி வீரர்களும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டனர். தொடர்ந்து இந்த சண்டை பெரிதாகி இரு அணிகளின் ஆதரவாளர்களும் சண்டையிட்டுக்கொள்ள, இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டு மிகுதிப் போட்டிகள் முடிவுற்றன. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தீர்மானம் எடுக்கும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழில் இடம்பெற்றது. இதில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மேற்குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, மேற்குறித்த பாடசாலைகளின் அணிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக வடமாகாணக் கபடி அணிகளிலிருந்து மேற்குறித்த இரு பாடசாலை அணிகளையும் நீக்குவது என தீர்மானம் எடுக்கப்பட்டு, அதனை அனைவரும் ஒருமித்து ஏற்றுக்கொண்டதாக சத்தியபாலன் மேலும் தெரிவித்தார்.

சீட்டு பிடிப்பவர்கள், மீற்றர் வட்டிக்காரர்களுக்கு தடை.

imagesCA4NG5WZவலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இது தொடர்பில் வலி. தெற்குக்கு உட்பட்ட சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச சபையினால் ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப் பிடிப்பவர்களின் நடவடிக்கைகள் காரணமாக சந்தை வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சந்தையில் அதிகளவிலான பொதுமக்கள் கூடியிருக்கும் வேளையில், மீற்றர் வட்டிக்காரர்களும், சீட்டுப் பிடிப்பவர்களும் வியாபாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசுவதும் அதனால் வியாபாரிகள் தற்கொலை செய்தல் மற்றும் தொழிலில் இருந்து நீங்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்மையினால் அதனைக் கருத்திற்கொண்டு இந்தக் கட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் இந்தக் கட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வியாபாரிகளும் பாதிப்படையப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரமருக்கு பாகிஸ்தான் பிரதமர் கடிதம்.

imagesCAZPNLQVஇந்திய பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு அவரை சந்தித்து பேசியது மிகவும் திருப்திகரமான அனுபவமாக இருந்தது என்று பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பிரதமராக கடந்த மாதம் 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  நவாஸ் மற்றும் மோடி ஆகியோர் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்த மோடியின் நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு காணப்பட்டது. ஆசியாவில் அண்டை நாடுகளுடனான உறவில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது. இந்தியா வந்து சென்றது திருப்திகரமான அனுபவமாக உள்ளது. அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பல்வேறு கருத்துகளையும் பரிமாறிக் கொண்டது மிகவும் பயனுடையதாக இருந்தது என்று தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் 195பேர் சாட்சியமளிப்பு .

unnamed 4கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு திங்கட்கிழமை (9) நண்பகலுடன் நிறைவடைந்தது. விசாரணையின்போது 195பேர் சாட்சியமளித்தனர் என்று ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். காத்தான்குடியில் 105பேரும், மண்முனைப் பற்றில் 90பேரும் சாட்சியமளித்துள்ளனர். மேலும் 211 புதிய விண்ணப்பங்களும் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. இதில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 181 புதிய விண்ணப்பங்களும், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 35 புதிய விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மெகஸ்வல் பராக்கிரம பரணகம மேலும் தெரிவித்தார். ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் சில உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை வைத்துக்கொண்டு விசாரணை ஒன்றை ஆணைக்குழு மேற்கொள்ள முடியாது’ என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். இவ்விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கடந்த 1990ஆம் ஆண்டு குருக்கள் மடம் பகுதியில் 167 முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட சாட்சியங்கள் தொடர்பாக ஊடகவியாலளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார். இதற்கு பதலளித்த அவர் மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில்; சில உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தற்போது விசாரணையிலுள்ளது. சரியான ஆதாரங்களுடன்தான் இந்த விவகாரம் மேற்கொள்ளப்படல் வேண்டும். உடல்கள் அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மட்டும் வைத்துக் கொண்டு விசாரணையை ஆணைக்குழு மேற்கொள்ளமுடியாது.  சரியான ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் ஆராயப்படும்’ என்று அவர் தெரிவித்தார். இதேவேளை,  ‘காத்தான்குடி கல்முனை வீதியில் முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு சாட்சியமளிக்கப்பட்டது. அதேபோன்று மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அமர்வின் போது டெலோ இயக்கமும் இராணுவத்தினரும் மேற்கொண்ட கடத்தல்கள் தொடர்பாக சாட்சியங்கள் இருந்ததுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் இருந்தன. முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளில் தனி நபர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும். விசாரணைகள் நிறைவுக்கு வரும் போது எவரை விசாரணை செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.