19.08.2014.
புன்னாலைக்கட்டுவன் கலைவாணி சனசமூக நிலையத்திற்கு மின் இணைப்புபெற நிதியுதவி-
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு கலைவாணி சனசமூக நிலையத்திற்கான மின்சார இணைப்பினை வழங்குவதற்காக ஒருதொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவரகளால் மேற்படி நிதியுதவியானது கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு கஜன் அவர்களிடம் நேற்றையதினம் (18.08.2014) வழங்கப்பட்டுள்ளது. கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், புன்னாலைக்கட்டுவன் பிரதேச சமூக சேவையாளருமான திரு லோகன் அவர்களும் உரையாற்றினார்கள். ஊர்ப் பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள் என அக்கிராமத்தைச் சேர்ந்த பெருமளவிலானோர் இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர். புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்தபோது புளொட்டின் சுவிஸ் கிளையினரால் வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு தொகுதியே (25,000ருபாய்) மேற்படி சனசமூக நிலையத்திற்கு மின்சார இணைப்பினை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.




புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸில் வசிக்கும் அருள், ரவி மற்றும் இலங்கையில் வசிக்கும் ரகுநாதன் ஆகியோர் இணைந்து சுமார் பத்தொன்பது (19) இலட்சம் ரூபா பெறுமதியான ‘மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியினை (Scanning Machine) புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கடந்த 15.08.2014 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். நிபுணர்களான அவ்தாஷ் கௌஷல், அஃமர் பீ சூபி ஆகிய இருவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு சட்ட மேதைகளான டேஸ்மன்டி சில்வா, சேர் ஜேப்ரி நைஸ், டேவிட் எம். கிரேன் ஆகிய மூவரும், கடந்த ஜுலை 15ஆம்திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
முல்லைத்தீவு – வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். வீட்டுக் காணியை துப்பரவு செய்து நெருப்பு வைத்த சமயம் அங்கிருந்த மர்ப்பப் பொருளொன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த வேலு செல்வநாயகம் என்பவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.