ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின்  நினைவுதினம் அஷ்டிப்பு  

untitledஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் துஆப் பிரார்த்தனைகளும் கத்தமுல் குர்ஆன் வைபவங்களும் பாடசாலை மாணவர்களுக்கான பேருரைகளும் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றன. இதனை முன்னிட்டு சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சவூதி தூதுவராலய பொதுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் வைபவமும், துஆப் பிரார்த்தனையும் சம்மாந்துறையில் இடம்பெற்றது. இதன்போது கல்முனை மாநகர உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீட் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சம்மாந்துறை தப்லீஹூல் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.சீ.ஏ.எம்.புஹாரி (மௌலவி), சம்மாந்துறை உலமா கங்கிரஸ் உறுப்பினர்கள், உலமாக்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த போரளிகள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என மேலும் பலர் கலந்துகொண்டனர்

வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,500 குடும்பங்களுக்கு நிவாரணம்  

imagesCAI3FFOVகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவந்த வரட்சி காரணமாக, 29 ஆயிரத்து 294 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் குடிநீருக்கான தட்டுப்பாட்டை எதிர்கொண்டதுடன், இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் ரீதியாக (விவசாயம், மீன்பிடி) பாதிக்கப்பட்டு வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், இவர்களின் அன்றாட உணவு தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையும் காணப்பட்டது. இதனையடுத்து, வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 7,500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு வரட்சி நிவாரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

விவசாய நிலங்களை விடுவிக்க படைத்தரப்பு இணக்கம் .

imagesCAHWB7BEமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோர் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்களை விடுவிப்பதற்கு இராணுவத்தினரும் விமானப்படையினரும் இணக்கம் தெரிவித்து கேப்பாப்பிலவு, வாவெட்டிகுளம், இயன்கன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள 67 விவசாயிகளுக்கு சொந்தமான 320 ஏக்கர் விவசாய காணியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகள், கடந்த வெள்ளிக்கிழமை (12) இராணுவத்தினரால் அகற்றப்பட்டன. தொடர்ந்து, கமக்கார அமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாயிகள் ஆகியோர் இராணுவ உயர் அதிகாரிகளிடம் சென்று, தங்கள் வயல் நிலங்களை அடையாளப்படுத்தினர். இதேவேளை, விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இயன்கன்குளம் பகுதியிலுள்ள 32 விவசாயிகளுக்கு சொந்தமான 82 ஏக்கர் வயல் நிலமும், வாவெட்டிக்குளம் பகுதியிலுள்ள 34 விவசாயிகளுக்கு சொந்தமான 240 ஏக்கர் வயல் நிலமும் விவசாயிகளிடம் வழங்கப்படவுள்ளன இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை, விமானப்படையினரும் இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவும் இணைந்து அகற்றி வருகின்றனர். மேற்படி இரண்டு பிரிவு வயல் நிலங்களும் எதிர்வரும் 25ஆம் திகதி விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக வழங்குவதாக இராணுவத்தினர் உறுதியளித்தனர். விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்த விவசாய நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன. அத்துடன், அப்பகுதியில் நின்றிருந்த கால்நடைகளையும் உரிமையாளர்கள் எடுத்துக்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும். இதனையடுத்து, மேற்படி பகுதிகளில் இம்முறை காலபோக நெற்செய்கையை விவசாயிகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. என கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்இ.பரமேஸ்வரன் தெரிவித்தார்.