இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு-

mankala இந்தியாவுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லி சென்றுள்ளார். இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துக்கொண்ட உயர்மட்டக்குழு கூட்டம் இன்று புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இவர் நாளையதினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற ஒரு வார காலத்திற்குள், அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது. மேலும் மங்கள சமரவீர மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இடையேயான சந்திப்பின்போதும் இலங்கை இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சந்திப்பின்போது மீனவர்கள் விவகாரம், தமிழர்கள் நல்வாழ்வு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, இலங்கைக்கு பெரிய வாய்ப்பாகும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தமது முதற்பயணமானது இந்தியாவுக்கு முன்னுரிமையை காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் மங்கள தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய மீனவர்கள் 15பேரை விடுதலை செய்துள்ளதாகவும் இந்திய மீனவர்கள் எவரும் இலங்கையில் தடுத்து வைக்கப்படவில்லையெனவும் அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்  .

புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எதிர்பார்ப்பு

nisa piswalபுதிதாக அமைக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதனையே நாங்களும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்ட தெற்கு மற்றும் மத்திய வலயத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்ற நாம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஜனநாயகம் தொடர்பாக வழங்கப்பட்ட வலுவான தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்று, தனது தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கியுள்ளது என உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் மேலும் கூறியுள்ளார்.

 
சரத் பொன்சேகாவுக்கு ஜயந்தவின் எம்.பி பதவி

sarath fonsekaஜயந்த கெடகொடவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சரத் பொன்சேகா விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜயந்த கெடகொட குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட சரத் பொன்சோகவின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டதனை அடுத்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஜயந்த கெடகொடவிற்கு வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை காலி துறைமுகத்தில்

kaliகாலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த ஆயுத களஞ்சியசாலை எவன்காட் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. இத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும்.
அதில் ரி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம் மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதிபெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதற்குள் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையும் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்துள்ளார்.

 இன்னும் இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்விரு கொள்கலன்களிலும் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன.
பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. பேலியகொடை – நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை நடத்தியபோது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
 
 
நாமல் ராஜபக்ஷ படம் பொறித்த 68,000 சுவர்க்கடிகாரங்கள் மீட்பு

uherமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட 68,000 சுவர்க்கடிகாரங்கள் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெய்யந்துடுவ, மாபிம பிரதேசத்திலிருந்த களஞ்சியசாலையொன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்டிருந்த ஒருதொகை சுவரொட்டிகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாகவும்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை விறாந்தின் அடிப்படையிலேயே அந்த களஞ்சியசாலை, நேற்று ஞாயிற்றுக்கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த களஞ்சியசாலையானது துறைமுக அதிகாரியொருவருக்கு 15 இலட்சம் ரூபாய் செலுத்தி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக களஞ்சியசாலையின் உரிமையாளர் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.