மன்னாரில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மௌனப் போராட்டம்-
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது இதன்படி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விசாரணை, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்றுகாலை 10.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த மௌனப் பேரணி மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது. “வடக்கில் அதிகளவான இராணுவ குவிப்பு எதற்கு”, “சர்வதேசமே போர்க்குற்றத்தை விசாரணை செய்”, “நீண்டகால கைதிகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்”, “எங்கள் பிள்ளைகள் எங்கே”, “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணையினை விரைவுபடுத்து” போன்ற பல சுலோகங்களைத் தாங்கியவாறு மிக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். குறித்த மௌனப் போராட்டம் நண்பகல் 12.30க்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்;க்கும் வகையிலேயே இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் காணாமல் போனோரின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் பங்கேற்றிருந்தனர்.