Header image alt text

இரத்ததானம் வழங்கல் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு- (Photos)

appabday05எமது கட்சியின் ஆதரவாளரான திரு. இ.தயாபரன் அவர்களின் 50ஆவது பிறந்தநதினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வும், கருவி என்றழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலயைத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (10.01.2015) சனிக்கிழமை யாழ். கோண்டாவிலில் இடம்பெற்றது. இதன்போது 53பேர் இரத்ததானம் வழங்கியிருந்தனர். அத்துடன் கருவி என்னும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தினருக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்தத்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் கோண்டாவில் இந்துக்கல்லூரியில் பயிலும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இணுவில் லயன்ஸ் கழகத்தினருக்கு 10,000 ரூபாய் பணமும் வழங்கிவைக்கப்பட்டது. Read more

விழிசுட்டி பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு-(Photos)

வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது கோரிக்கையின் பிரகாரம் 7.01.2015 சனிக்கிழமை சங்கானை விழிசுட்டிப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரனேசன் அவர்களால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது 50மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப் பகுதியில் பாதிக்கப்ப்ட குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்படும் என வலி மேற்கு தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். Read more

நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமனம்-

நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமை புரிந்த ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டு இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்கின்றார். அரச சேவையிவ் 25வருட கால அனுபவமுள்ள இவர். சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியாவார்.

புதிய ஜனாதிபதி கடமையை பொறுப்பேற்றார்-

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், உயர் தரத்திலான அரச ஊழியர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்வது அனைவருடைய கடமையாகும். தேர்தல் பிராசாரங்களில் குறிப்பிட்டது போன்று 100 நாட்களில் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

அமைச்சரவையில் இணைய மாட்டோம்: அனுரகுமார-

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துகொள்ளப் போவதில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 100 நாட்களை மாத்திரமே கொண்டது. இவற்றின் செயற்பாடுகள் குறுகிய காலத்தை அடிப்படையாhக கொண்டவை. எனவே இந்த அமைச்சரவையில் இணைவது எவ்வித பயனும் இல்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் தொண்டமான் பிணையில் விடுதலை-

தபால் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்று பண்டாரவளை நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவர் ஊடாக சரணடைந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்றுமாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 2லட்சம் ரூபா பெறுமதியா இரு சரீரப் பிணைகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தபால் ஊழியரான பெரியசாமி ஞானசேகரனுக்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் ஒன்றை அளிக்குமாறு செந்தில் தொண்டமானுக்கு பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கல்வியமைச்சர் குணவர்தன குடும்பத்துடன் பயணம்-

முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தனது குடும்பத்துடன், இன்று திங்கட்கிழமை சீனாவுக்கு பயணமாகியுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 எனும் விமானத்தில் அவர் சீனாவுக்கு பயணமானதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

ஜனாதிபதியின் வெற்றிக்கான வாழ்த்தும், தமிழ்பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளும்- மு.தம்பிராசா-

thambiதமிழ் பேசும் மக்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை நாட்டில் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான விருப்பத்தை தமது அமோக ஆதரவை வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தி நாட்டின் தலைவராக மைத்திரிபால சிறிசேனாவை வெற்றிகொள்ள வைத்துள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மூலம் இலங்கை நாட்டில் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்பதையும் அதற்கு பக்கதுணையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் செயற்படுவார் என்றும் நான் நம்புகிறேன். Read more

பிரதமரின் செயலர் நியமனம், மைத்திரிபாலவின் வெற்றிடத்திற்கு நியமனம், ஷிராணிக்கு பதவி-

siraniபுதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக, இலங்கை நிர்வாக சேவை அதிகாரி சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன இந் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு பொலனறுவை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியலில் அடுத்ததாக அதிக வாக்குகளைப் பெற்ற ஜயசிங்க பண்டார நியமிக்கப்படவுள்ளார். இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுக்கொள்வார். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பேன் என மைத்திரிபாலவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் இழப்பு, தேர்தலின் மோசடி குறித்து விசாரணை-

mangalaஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 17வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் 1 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறிய நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சுயாதீன வேட்பாளர்கள் இருவரினதும், 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களதும் கட்டுப் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல் ஆணையாளர் யு.அமரதாச இதனைத் தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர்கள் தலா 75 ஆயிரம் ரூபாவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணமாக செலுத்தி இருந்தனர். இதன்படி அவர்களால் செலுத்தப்பட்ட 9 லட்சம் ரூபாய் கட்டுப்பணம் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த அரசாங்கம், நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அதிகாரத்தையும், அரச சொத்துக்களையும் பயன்படுத்திய விதம் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அதிகார பலம், அரசாங்க சொத்துக்கள், காவற்துறை பலம் என அனைத்தையும் கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைய அனைவரும் ஒன்றிணையுங்கள்-ஜனாதிபதி அழைப்பு-

parlimentதேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.30மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். இந்த நாட்டிலிருக்கின்ற அனைவரும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் என்ற இனமத பேதங்கள் பாராது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவமாக இந்த நாட்டில் வாழ வேண்டும். எமது நாட்டைப் பொறுத்த வரையில் பொருளாதாரத்தை அதிகமாக ஈட்டித் தரும் துறையாக விவசாயம் காணப்படுகிறது. எனவே எனது நூறுநாள் வேலைத்திட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்படும். அத்துடன் சாதாரண மக்களின் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பக்கச்சார்பற்ற பொலிஸ் திணைக்களத்தை உருவாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி இலஞ்சம், ஊழல் மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் இல்லாது நாட்டை சமாதான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையில் எமது அரசு ஈடுபடும். சர்வதேசத்திலும், தேசிய ரீதியிலும் இணக்கப்பாட்டை கட்டி எழுப்பி நல்லுறவை பேணுவது எமது தலையாய கடமையாகும் எனவே நாட்டு மக்கள் அனைவரும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துடனும் ஒன்றிணைந்து தேசிய அரசினை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். எனது முதலாவதும் இறுதியுமான தேர்தல் இது. இந்த தேசத்திற்கு தேவையானவர் அரசன் அல்ல மாறாக நல்ல ஒரு மனிதனே என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கெரிய மஹாநாயக்கர்களை சந்தித்தனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள டி.எஸ்.சேனாநாயக்கவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டனர். இடையில் ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் தலதா மாளிகையில் மத ஆராதனையில் ஈடுபட்டத்தின் பின்னர் மாஹா நாயக்கர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை- புதிய அமைச்சரவை இன்று நியமனம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கண்டி சிறீ தலதா மாளிகையில் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்காக உரை நிகழத்தவுள்ளார். இதற்காக அவர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து புறப்படவுள்ளார். கண்டி செல்லும்போது, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அவர் அஞ்சலி செலுத்தவும் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்று பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணிக்கும் இதில் அமைச்சுப் பதவிகளை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, பூஜித்த அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை, நிதி அமைச்சுகளின் செயலர்கள் நியமனம், ரூபவாஹினி தலைவர் பணியேற்பு-

செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலராக சந்திரசேன மாலியத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கையின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார். இவர், இதற்குமுன் திட்டமிடல் அமைச்சு, அதிவேக நெடுஞ்சாலைகள் அமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அரச சேவையில் அவர் 45வருட அனுபவத்தை கொண்டவராவார். இதேவேளை மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது இவ்விதமிருக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சோமரத்தின திஸாநாயக்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கடமையை நேற்றையதினம் மாலை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பெசில் ராஜபக்ஷ குடும்பத்தினர், ஆறுமுகன் தொண்டமான் வெளிநாடு பயணம்-

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் சகோதரருமான பெசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை 2.55 அளவில் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.349 என்ற விமானத்தின் ஊடாக அவரும், அவரது பாரியாரும் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் அமெரிக்கா செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது இவ்விதமிருக்க முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான நேற்று அதிகாலை சென்னை புறப்பட்ச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை 6.45 மணியளவில் சென்னைக்கு புறப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்171 விமானத்திலே அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 04.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமையத்தில், அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதமளவில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவாகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இதன்போது இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் இந்த விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 இந்திய மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரங்களின் இலங்கைக்கான இராஜதந்திரிகள் ஆகியோர் இன்று நாட்டைவிட்டு சென்றுள்ளனர்.

செந்தில் தொண்டமானை கைதுசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்-

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பதுளை, நியூபேர்க் தோட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தபாற்காரரான பெரியசாமி ஞானசேகரன், பசறை-எல்ல வீதியிலுள்ள நீர்போட் தோட்டத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துவிட்டு திரும்பிகொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு உள்ளானார். இச்சம்பவம் தொடர்பில், தபாற்காரர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் தான் விநியோகிப்பதற்கு வைத்திருந்த 35 வாக்காளர் அட்டைகளையும், தன்னுடைய கையடக்கத் தொலைபேசியையும் காணவில்லை என்று தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதேவேளை, செந்தில் தொண்டமானுக்கு எதிராக பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்கதெனியவுக்கு விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு-

புத்தளம் மாவட்டம் சிலாபம், பங்கதெனிய பிரதேசத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் அந்தப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தில், அந்தப் பகுதியில் பிரபலமான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரே கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறிருப்பினும் இது தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்ற சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இதுவரை இரு சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

அரசியல் நியமனம்பெற்ற வெளிநாடுகளுக்கான தூதுவர்களை பதவிநீக்க நடவடிக்கை-

வெளிநாடுகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றுள்ள 48 தூதுவர்களை எதிர்வரும் மாதம் பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் எனவும் தெரிவிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 41வது சிரார்த்த தினம்-

19741974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 41வது சிரார்த்ததினம் இன்றாகும். 41வது சிரார்த்த தினமான இன்றும் இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வில் எழுத்தாளரும், பதிப்பாளரும், கல்விமானுமாகிய மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பா.கஜதீபன், கனகரட்ணம் விந்தன், பரஞ்சோதி மற்றும் வலி வடக்கு பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன், வலிவடக்கு உப தவிசாளர் சஜீவன், நல்லூர் பிரதேசசபைத் தலைவர் வசந்தகுமார், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள், தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற சம்பவங்களை மிகத் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும் இந்த நினைவுத் தூபியினை அமைப்பதற்கு எடுத்த பல்வேறு முயற்சிகள் பற்றியும், அது பல தடவைகள் அரச படைகளினால் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.
Tamilarasu2TamilarasuTamilarasu1Tamilarasu6Tamilarasu5Tamilarasu3Tamilarasu7

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற பான்கீ மூன் விருப்பம்-

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான முடிவை வழங்கியமை தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் நம்பகமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்தமை தொடர்பில் இலங்கைத் தேர்தல்கள் செயலகத்திற்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி, சமத்துவம் மற்றும் அரசியல் கலந்துரையாடல் போன்ற விடயங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் பயணம்- ஐ.டி.என் தலைவர் சிங்கபூர் பயணம்-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான டட்லி ராஜபக்ஷ, இன்று அதிகாலை பாங்கொக் பயணமாகியுள்ளார். அமெரிக்கப் பிரஜையான அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வந்திருந்தார். அதன் பின்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்திலுள்ள அதிசொகுசு அறையில் நான்கு நாட்கள் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், தாய் விமான சேவைக்கு சொந்தமான டி.ஜி.308 என்ற விமானத்திலேயே இன்றையதினம் அதிகாலை 1.30க்கு நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை சுயாதீன தொலைக்காட்சியின் (ஐ.டி.என்) தலைவர் அநுர சிறிவர்தன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார். இலங்கை விமானசேவைக்கு சொந்தமான விமானத்திலேயே சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு செயலாளராக பீ.எம்.யூ.டி பஸ்நாயக நியமனம்-

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக பீ.எம்.யூ.டி பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீ.எம்.யூ.டி பஸ்நாயக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக முன்னதாக செயற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும் – இந்தியா-

இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாகியுள்ளமை, வினைத்திறனான மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான நேர்மையான அடித்தளத்தை இட புதிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர் தீன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மறுசீலமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, அனைத்து சமுகங்களுக்கும் இடையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார். அதேநேரம் இலங்கையில் 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்படுவதற்கு, புதிய அரசாங்கத்தையும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர் தீன் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய அரசின் வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு சின்ஹா சமர்ப்பித்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றபின் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த முதல் வெளிநாட்டு பிரதிநிதி சின்ஹா ஆவார்.

செந்தில் தொண்டமானை கைது செய்வதற்கு நடவடிக்கை-

எல்ல – நியுபேர்க் பகுதியில் வைத்து அஞ்சல் பணியாளர்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்து வந்த அஞ்சல் பணியாளர் ஒருவரை, எல்ல -நியுபேர்க் நான்காம் கட்டை பிரதேசத்தில் வைத்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் தாக்குதல நடத்தியிருந்தனர். இதற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் இது தொடர்பில் செந்தில் தொண்டமானை கைதுசெய்ய வலியுறுத்தி அஞ்சல் பணியாளர்களும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இந்நிலையில் அவரை கைது செய்வதற்கான உத்தரவை பண்டாரவளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இதன்படி அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து-

இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைதியான, ஒழுங்கான ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடித்தமைக்காக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் கூறியுள்ளார். புதிய ஜனாதிபதி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்று அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும், ஜூலி பிஷப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வைத்த நம்பிக்கை காப்பாற்றப்படும்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

நாட்டின் எதிர்காலம் குறித்த மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உரியவாறு காப்பாற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக நேற்றுமாலை உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சிறிபவன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுக அபிவிருத்தி தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாரையும் பழிவாங்கப் போவதில்லையெனவும், சிறந்த வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்து சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணவிருப்பதாகவும் கூறியுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளராக முன்னாள் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி. அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலாளராக கடமையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவுக்கு விளக்கமறியல்-

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர (சொக்கா மல்லி) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கஹவத்தைப் பகுதியில் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவளிக்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டமை தொடர்பில், நேற்று இரவு அளுத்கம பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். மேற்படி சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 5ம்திகதி, இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபரை அன்றையதினம் (20ம் திகதி) பெல்மடுலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளமை தெரிந்ததே.

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம்-

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாட்டின் அன்பான மக்களின் பொறுப்புகள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும், அதனை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவேன் எனவும் ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். மேலும் மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இதன்போது ரணில் விக்ரமசிங்கவும் புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் விடுத்த அறிக்கை-

Sithar ploteஒரு அரசியல் மாற்றத்தை விரும்பி இலங்கை மக்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். விசேடமாக தமிழ், முஸ்லிம், மலைய மக்கள் ஏகோபித்து வாக்களித்து அவருடைய வெற்றிக்கு வழியமைத்துள்ளார்கள். அத்துடன் பிரத்தியேகமாக வடகிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் மிகப் பெருவாரியாக, கடந்த மாகாண சபைத் தேர்தலிலே வழங்கிய வாக்குகளைவிடவும் அதிகமான வாக்குகளை அளித்து அவருக்கு தங்களுடைய ஏகோபித்த ஆதரவினை தெரிவித்துள்ளார்கள். அத்துடன் தமிழ் மக்கள் இன்று முகம்கொடுக்கின்ற முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தங்கள் வாக்குகளை அளித்துள்ளார்கள். இடம்பெயர்ந்து மிக நீண்டகாலமாக தங்களுடைய சொந்த நிலங்களுக்குச் செல்லமுடியாத மக்கள் மீளக் குடியேற வேண்டுமென்ற ஒரு அவாவிலே இருக்கின்றார்கள். சிறைகளிலே வாடுகின்ற இளைஞர்கள், அவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலை வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். அதேவேளையில் காணாமற் போனவர்கள் சம்பந்தமாக ஒரு நியாயமான, நீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கின்றார்கள். இவைகளெல்லாம் உடனடியாகச் செய்ய வேண்டிய விடயங்களாக இருந்தாலும்; காலக்கிரமத்தில் தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் கோரிக்கையான ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வினை எதிர்பார்த்தும் அவர்கள் தமது வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், அதன் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களினதும் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்கள். திரு. இரா.சம்பந்தன் அவர்களின் சாணக்கியமான நகர்வுகள்மூலம் அவர் கூறுவதுபோல, இந்த 2015ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்கள் கௌரவத்துடன் கூடிய ஒரு சமாதான வாழ்வையும் ஒரு அரசியல் தீர்வையும் எட்டுவார்கள் என்று நாம் எதிர்பார்ககின்றோம்.

திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன்,
வட மாகாணசபை உறுப்பினர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
09.01.2015.