சு.க.வின் மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்டோர் வழக்கு

SLFPசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும், மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மத்தியகுழுவிலிருந்து சட்டவிரோதமான முறையிலேயே தாங்கள் ஐவரும் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆகையால் மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எஸ்.எம். சந்திரசேன, டி.பீ. ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகிய ஐவருமே நீக்கப்பட்டனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள், மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தனது தீர்மானம் குறித்து மீளாய்வு செய்வார் என டி.பி.ஏக்கநாயக்க

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீள இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். ஏற்கனவே வகித்து வந்த பதவிகள் மீள அளிக்கப்பட உள்ளதாகவும். மத்திய செயற்குழுவிலிருந்து நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதி மீளாய்வு செய்ய உள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தம்மிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார். மீண்டும் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்க முடியும் என டி.பி.ஏக்கநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார

ஜனாதிபதி-பிரதமருக்கு இடையில் வெள்ளி சந்திப்பு

ranil-mathriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் நிறைவேற்ற வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வலியுறுத்துவதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது