Header image alt text

20ஆவது திருத்தம் தமிழ், முஸ்லிம், மலையக தமிழ் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நீக்குவதாக அமைய வேண்டுமென வலியுறுத்தல்-
kumaranகொண்டுவரப்படருக்கும் 20ஆவது திருத்தம் ஒரு முக்கிய விடயம் என்பதால் இந்தத் திருத்தம் தற்போது இருக்கின்ற தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நீக்குவதாக அமையவேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொது செயலாளருமான சுசில் பிறேம ஜெயந்தை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து வலியுருத்தியுள்ளனர்.

Read more

யாழ்.மாவட்ட எம்.பிக்கள் 11ஆக அதிகரிப்பு-

rajithaசிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமையை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு தரப்பும் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும், தமது கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தன என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தேசிய நிறைவேற்றுச் சபையில் ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர் வண. அத்துரெலிய ரட்ண தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய யோசனையின் பிரகாரம், 225ஆக இருக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கையை 238ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதுள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் எதுவும் ஏற்படாது. தேர்தல் தொகுதிகளும் அப்படியே இருக்கும் .சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், பல்லின தேர்தல் தொகுதிகளுக்குமான உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். யாழ் தேர்தல் மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. எனினும், அங்கு 9 எம்.பிக்களே இருக்கின்றனர். எனவே, 11 தொகுதிகளுக்கு 11 எம்.பிக்கள் என்று எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் இருக்கின்ற நிலையில், 12 எம்.பிக்களே இருக்கின்றனர். அங்கு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் பிரதிநிதித்துவம் வரும் வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கப்படும். பல்லின தேர்தல் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 8ஆல் அதிகரிக்கப்படும். இதன்மூலம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிக்கும். இந்த உத்தேச திட்டத்தின் மூலம் சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும். தேசிய நிறைவேற்றுச் சபையில் முன்வைக்கப்பட்ட உத்தேச தேர்தல் முறைமை மாற்ற யோசனைக்கு அதில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் காலவரையறையின்றி நீடிப்பு-

Janathipathi anaikulu (2)அரச பதவி வகிப்போர் மற்றும் அரசியல் பதவிநிலையில் இருப்போர் மேற்கொண்ட அல்லது மேற்கொள்கின்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம், காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. அரசியல் பதவி வகித்த அல்லது வகித்துக் கொண்டிருக்கின்றவர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் நியதிச் சட்டசபைகளில் சேவையாற்றுபவர்கள் அல்லது சேவையாற்றிக் கொண்டுள்ளவர்களின் மோசடிகள், ஊழல்கள், குற்றவியல் நம்பிக்கை மீறல்கள், சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்க முடியும் என அவ்வாணைக்குழுவின் செயலாளர் லெசில் டீசில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்படும் நட்டங்கள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இக்குற்றங்களைச் செய்யும் மேற்படி நபர்கள் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், இம்மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவு பெற்றதால், அதற்கான காலத்தை வரையறையின்றி நீடிக்க மேற்படி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த முறைப்பாடுகளை பதிவுசெய்யப்பட்ட தபாலில், ஆணைக்குழுவின் செயலாளர், 5ஆவது தொகுதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு-7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத களஞ்சியசாலையை அப்புறப்படுத்த உத்தரவு-

maithripala3ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றிய காலகட்டத்தில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருக்க, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஆயுத களஞ்சியம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்பதால், அதனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த ஆயுத களஞ்சியத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தானியங்கி துப்பாக்கிகள் களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்ததுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இந்த ஆயுத களஞ்சியம் தொடர்பான தகவல் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பாரதூரமான நிதி மோசடிகள் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த சில நாட்களின் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிதக்கின்றன.

அர்ஜுன் மஹேந்திரனை பதவி விலக்குமாறு மகஜர்:

arjuna mahendranஇலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை பதவி விலக்குமாறு கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெப்பமிட்ட மகஜர், சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, திறைசேரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரும் மத்திய வங்கியின் ஆளுநருமான அர்ஜுன் மஹேந்திரனுக்கு நேரடியான தொடர்பேதும் இல்லை என்று மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜுன் மஹேந்திரன், இவ்விரு பதவிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர, மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே இவர், நியமிக்கப்பட்டார். சட்டவிரோதமான முறையில் திறைசேரி பிணை முறி பத்திரங்களை அர்ஜுன் மஹேந்திரன் வழங்கியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற ஜே.வி.பி போராட்டம்-

JVPஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாளை (இன்று -24) முதல் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம், தேசிய நிறைவேற்று சபை உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் தமது கட்சி பங்களிப்பை வழங்கி இருக்கிறது. எனினும், தற்போதைய நிலையில் அதனை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கத்துக்கு எதிராக விசேடமாக ஜனாதிபதி மற்றும் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆட்சேபிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் குழுவினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தவுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறினார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தாமதப்படுத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தலையீடு உள்ளது என்றும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார். எதிர்வரும் 27ம், 28ம் திகதிகளில் இந்த சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடத்தி அதனை நிறைவேற்றவில்லையாயின், அதன்பின் அதனை நிறைவேற்றுவதென்பது முடியாத காரியமாகிவிடும் என்றும் திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

புதிய தேர்தல் முறை, எம்.பிக்கள் எண்ணிக்கை விடயத்தில் குழப்பம்-

election boxபுதிய தேர்தல் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். புதிய தேர்தல் முறைமையின் படி, யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆகவும், கண்டியில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அதேநேரம் சில பிரதேசங்களில் சில தொகுதிகளில் இரட்டை ஆசன முறைமையில் எட்டு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 238ஆக அதிகரிக்கவுள்ளது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

டயகமையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 126 பேர் இடம்பெயர்வு-

dayagamaநுவரெலியா, டயகம வௌர்லி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 126பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வேவர்லி தோட்டத்தில் நேற்றுமாலை பெய்த கடும் மழையால் ஆறொன்று பெருக்கெடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.எச்.எம் மஞ்சுல தெரிவிக்கின்றார். 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் வௌர்லி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை தோட்ட முகாமைத்துவமும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையமும் இணைந்து வழங்கி வருகின்றன. மழைக் காலங்களில் ஆறு பெருக்கெடுப்பதால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக டயகம வௌர்லி தோட்ட மக்கள் கூறியுள்ளனர் இதேவேளை, இன்றுகாலை 8.30 உடன் முடிவடைந்த கடந்த 24மணித்தியாலங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அத்தோடு இன்றுமாலை வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

திருடர்களை பாதுகாக்கும் பாராளுமன்றம் அவசியமில்லை-பிரதமர் ரணில்-

ranil01லஞ்சம் மற்றும் ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலையான அரசாங்கம் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். திருடர்களை பாதுகாக்கும் பாராளுமன்றம் அவசியம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு செல்ல மறுப்பது ஏன் என தெரியவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அன்று ஆகாயத்தில் பறந்தவர்கள் பாராளுமன்றில் ஒருநாள் இரவு தரையில் உறங்கும் அளவிற்கு நல்லாட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் பெற்ற வெற்றியை கொள்ளையடிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என அவர் கூறினார். அடுத்த தேர்தலில் ராஜபக்ஷக்களை விரட்டி புது பாராளுமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறியோர் கைதாவர்-பொலிஸ்-

police ...நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவையும் மீறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பின் பேரில், அவர் நேற்று அங்கு சென்றிருந்தபோதே அவருக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொது பல சேனா அமைப்பு மற்றும் இராவணா சக்தி என்ற பௌத்த பிக்குமார்களின் அமைப்புக்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்திருந்தன. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, டலஸ் அலஹப்பெரும, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி சந்திப்பு இரத்து-

Mahinda-Maithri-03ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெறுவதற்கு திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தை இரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாகவே இந்த சந்திப்பு இராஜினாமா செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்புக்கு நானே ஏற்பாட்டாளராக இருந்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், மகிந்த ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாக அவரால் சந்திக்க முடியாது என்றும் குமார் வெல்கம எம்.பி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வரவேண்டாம் என்று கூறியும்; வந்தார்-மகிந்த ராஜபக்ச-

mahinda_rajapakseஎனது சகோதரர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம், அவ்வாறு வந்தால் கைது செய்வார்கள் என்று நான் அறிவுறை கூறினேன்’ என்று முன்னாள் ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருப்பினும், ‘நான் களவு செய்யவில்லை. நான் வராமளிருப்பது மஹிந்த அண்ணான உங்களுக்கு அவமானம். அதனால் நான் இலங்கைக்கு வருவேன்’ என்று அவர் எனக்கு பதிலளித்தார். ஆனால், நான் அவரிடம் சொன்னது போலவே நடந்தேறிவிட்டது’ என்று மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ‘இருப்பினும் பரவாயில்லை. நானும் 3 மாதங்கள் சிறையில் இருந்தவன் தான். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஓரிரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தால் தவறில்லை’ என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் தொடர்பில், மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்து நகரங்களுக்கும் வழிப்பாதைச் சட்டம் வருகின்றது-

policeநாட்டின் அனைத்து நகரங்களிலும் வழிப்பாதைச் சட்டத்தை அமுல்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பான போக்குவரத்து முகாமைத்துவம் குறித்த கூட்டமொன்று பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் நேற்று நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில், மேற்படி வழிப்பாதைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது வெற்றியளித்துள்ளதை அடுத்தே அச்சட்டத்தை நாட்டின் ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரொஹன் பெரேரா பத்திரங்கள் ஒப்படைப்பு-

rohan pereiraஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ரொஹன் பெரேரா, நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் தமது தகுதிப் பத்திரங்களை ஒப்படைத்துள்ளார். கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் அவர் இந்த பத்திரங்களை கையளித்ததாக, நியுயோர்க்கில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியின் காரியாலயம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அவர்களுக்கு இடையில் சுமூக பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து இரண்டு தரப்பும் ஆழமாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன – இலங்கை உறவில் பாதிப்பில்லை – சீன தூதுவர்-

sri lanka chinaஇலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனாவின் தூதுவர் ஈ சியங்லியாங், சீனாவின் சின்ஹ{வா ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வரலாற்று காலம் தொட்டு நல்லுறவு காணப்படுகிறது. புதிய அரசாங்கத்தின் கீழ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர ஒத்துழைப்பு உறவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பல இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு எதிர்காலத்திலும் மேலோங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டைப்பற்றி சிந்தித்து 19க்கு கை உயர்த்துங்கள்-ஜனாதிபதி-

maithiriஜனநாயகத்தையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நூறு நாட்கள் திட்டத்தின் நிறைவு நாளான நேற்று இரவு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். Read more