ஐ.நா விசேட பிரதிநிதி அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம்-

united nationsஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தும் நோக்கில் 11பேர் கொண்ட விசேட செயலணி ஒன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கி இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தவே 11 பேர் அடங்கிய விசேட ஆலோசனை செயலணி ஒன்றை இலங்கை அரசாங்கம் நியமிக்க உள்ளது. இந்த விசேட செயலணியின் பணிகளுக்கு உண்மை, நீதி மற்றும் வன்முறைகள் மீள எழாமல் இருப்பது குறித்த ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பெப்லே டி கிரிப்பின் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. அடுத்த வாரம் இந்த விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைய வெளிவிவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த செயலணி உருவாக்கப்படவுள்ளது. இந்த விசேட செயலணியின் தலைவராக மனோரி முட்டெட்டுவேகமவும், செயலாளராக டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்துவும் கடமையாற்றவுள்ளனர். காணாமல் போனவர்கள் விவகாரம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்த செயலணி பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.