அரசியல் கைதிகளின் மருத்துவ சிகிச்சையை புறக்கணிக்க தீர்மானம்-

welikada jailதமிழ் அரசியல் கைதிகள் 14பேர் தொடர்ச்சியாக 12ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளன. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகளை முழுமையாக புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தமக்கான முடிவொன்று கிடைக்கும் வரையில் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லையென உறவினர்கள் ஊடாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் இவ்வாறு தமது குடும்ப அங்கத்தவர்கள் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கூறியுள்ளார். மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரேமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், தி.மனோகரன், யோசப் செபஸ்தியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள் மற்றும் இரவீந்திரன் மதனி ஆகிய 14 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 23ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.