கிளிநொச்சியில் வட மாகாண கூட்டுறவு சங்கங்களின் எழுச்சிமிகு மேதினம்-(படங்கள் இணைப்பு)
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு சங்கங்களின் எழுச்சிமிகு மேதின ஊர்வலம் இன்றுபிற்பகல்; கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமாகி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து மேதினக் கூட்டம் நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத் தலைவர் அ.கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த மேதின ஊர்வலத்தில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான இ.பசுபதிப்பிள்ளை. பா.அரியரட்ணம், விந்தன் கனகரட்ணம், கந்தையா சிவநேசன்(பவன்), ஆர். இந்திரராஜா, எம்.பி.நடராஜா, எம்.தியாகராஜா ஆகியோரும் கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி. மதுவந்தி உள்ளிட்ட கூட்டுறவு அதிகாரிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், கடற்றொழில் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். மிகப் பிரமாண்டமான இந்த ஊர்வலம் பிற்பகல் 2.30மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமாகி கூட்டுறவுச்சங்க மண்டபத்தினை வந்தடைந்ததைத் தொடர்ந்து மாலை 4.00மணிக்கு மேதினக் கூட்டம் ஆரம்பமாகி மாலை 6.00 மணியளவில் கூட்டம் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தில் மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என பலரும் உரையாற்றியதைத் தொடர்ந்து, மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்த சிறந்த ஊர்திகளுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.