வட மாகாண நீர் வழங்கல் சேவைகள் தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம்-

kudineer original picsவட மாகாண நீர் வழங்கல் சேவைகள் தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது பங்கேற்புடன், மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்கள் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டப் பணிப்பாளர் தி.பாரதிதாசன், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண அவைத்தலைவர் சி.விகே.சிவஞானம், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இரணைமடுகுளத்து நீரைக் கொண்டு அல்லது உப்புநீரை நன்னீராக்குவதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்குவது சம்பந்தமாக இதன்போது ஆழமாக ஆராயப்பட்டது. இதன்போது இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டம் அவசியமானது என்றும், அதனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் பலராலும் வலியுறுத்தப்பட்டது. இரணைமடுக்குளத்தில் வறட்சி ஏற்பட்டால் மாத்திரமே உப்புநீரை நன்னீராக்கி வழங்கமுடியும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. அத்துடன் குடாநாட்டிற்கு குடிநீரை வழங்கும் பொருட்டு வடமராட்சி கிழக்கு தாளையடி மீனவர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் அங்கிருந்து கடல்நீரை குடிநீராக்கும் பதிலீட்டு திட்டம் செயற்படுத்தப்படுவது, இரணைமடுவில் வரட்சி ஏற்படும் காலங்களில் மாத்திரம் இத்திட்டத்தை முன்னிறுத்துவது என்பன குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது மாரிகாலத்தில் இரணைமடுகுளத்து நீரை கடலுக்கு செல்ல விட்டுவிட்டு கடல்நீரை குடிநீராக்குவது பொருத்தமான நடைமுறையல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் நான்கு ஐந்து மாதங்களுக்குள் குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டுமென்பதை பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறினார்கள்.