யாழ். குப்பிழான் சிங்கப்பூர் திரு. கந்தையா கிருஸ்ணர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நிதிப் பங்களிப்பில் வருடாந்த உதவிகள் வழங்கும் நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் 17.10.2018 புதன்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்றது.

குப்பிழான் வடக்கு கிராம முன்னேற்றச் சங்கத் தலைவரும், ஆசிரியருமான திரு. தி.சசீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்ஸன், யாழ். இந்து கலாச்சார அமைச்சின் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவ மகாலிங்கம், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் ந.சிவலிங்கம், எழுத்தாளர் ஐ.சண்முகலிங்கன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கிராம அலுவலர்கள் ந.நவசாந்தன், பே.மயூரதன், கன்னிமார் கௌரியம்பாள் ஆலயத் தலைவர் சோ.பரமநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள் வா.அபிராமி, சி.கணேசநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து ஆசியுரையினை சிவஸ்ரீ ச.வைத்தீஸ்வரக் குருக்கள் வழங்கினார். வரவேற்புரையினை அதிபர் தி.ரவீந்திரநாதன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள் இடம்பெற்று கந்தையா கிருஸ்ணன் பிறந்தநாள் அறக்கொடை உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவியர், க.பொ.த.சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டதோடு, பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டது.

அத்துடன் குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு தலா ரூபா 2000/- பெறுமதியான உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டன. நிகழ்வில் நலன்விரும்பிகள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.