ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக நேற்றுமாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சரியான நிலை, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பவற்றை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீனப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு அலரிமாளிகையை ஒப்படைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
உடனடடியாக அமுலுக்கு வரும் வகையில் கூட்டத்தொடர் பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அந்த பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 51(1) இலக்க சரத்தின் படி அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுமாலை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகம், அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.