பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோவிலுக்கு வந்த இளைஞர்கள்மீது, வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், கோவிலுக்கு அருகில் சில இளைஞர்கள் கூடி நின்றபோது, அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாள் வெட்டுக்குழுவினர், இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த தாக்குதலில், இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த இளைஞர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் இவ் வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. காயமடைந்த ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று உள்ளது.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 09 மணியளவில் இடம்பெற்று உள்ளது. நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக வீட்டில் இருந்தோர் தெரிவித்தனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.