வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்குவதற்கு மேற்கொண்டுள்ள அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாக சபையினரும், சமளங்குளம் கிராம மக்களும் இன்று (22.01.2019) செவ்வாய்க்கிழமை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து உரையாடியதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.

ஆலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம்(மோகன்)-கட்சியின் உபதலைவர், வவுனியா நகரசபை உறுப்பினர்), சு.காண்டீபன்-வவுனியா நகரசபை உறுப்பினர்), த.யோகராஜா-கட்சியின் தேசிய அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. இதேவேளை இவ் கோவில் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என்பன காணப்படுகின்றன.

கடந்த சில நாட்களிற்கு முன் தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் என கட்டிடப் பொருட்கள் இவ்வளாகத்தில் இறக்கப்பட்டு மேற்படி சின்னங்களை புனரமைக்க முயற்சிக்கப்பட்டபோது, ஆலய நிர்வாகத்தினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவ்வேலைகள் இடைநிறுத்தப்பட்டது.

இவ்வாலயத்தில் பரம்பரை பரம்பரையாக தாம் வழிபட்டு வருவதாகவும், தற்போது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தம் என்று தெரிவித்து புத்தர் சிலையினை ஸ்தாபிக்க முயல்வதாகவும் அப்பகுதி மக்கள் இதன்போது குற்றம் சுமத்தியிருந்தனர்.