கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிடுகையில், மட்டக்களப்பைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 04ம் திகதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமையால் கைது செய்யப்பட்ட இவர் 50 வருட சிறைதண்டனையும், ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையிலே மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

அவர் சுகயீனமடைந்திருந்ததுடன், வெலிக்கடைச் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வந்தார். 44 வயதுடைய இவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையியே உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.