இந்திய கடல் வலயம் தொடர்பில் கவனம் செலுத்தி சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக் கொண்ட முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று (28) நடைபெற்றது.இதில் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்றன.

மூன்று நாடுகளினதும் பாதுகாப்புத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மாரியா தீதி மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.

மொரிஷியஸ், சீசெல்சு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்புப் பிரிவு தலைவர்கள் கண்காணிப்பாளர்களாக இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.

சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக்கொண்ட இந்த மாநாட்டில் இந்திய கடல் வலயத்தில் சூழல் மாசு, இடர் முகாமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடு மற்றும் கடல்சார் உரிமைகள் குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

வலயத்தின் சமாதானத்தையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் நோக்கில், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடிக்கடி கூடுவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

Air Bubble தொனிப்பொருளுக்கு அமைவாக கடும் சுகாதார வழிமுறைகளுடன் இந்த மாநாட்டில் விருந்தினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.