அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இதுவரை COVID தடுப்பூசி கிடைக்கவில்லை.

இந்தியாவின் சேரம் நிறுவனத்தினால் (Serum Institute) தயாரிக்கப்படும் Oxford–AstraZeneca எனப்படும் Covishield தடுப்பூசி, பிரித்தானியா, மாலைத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டன.

30 மில்லியன் தடுப்பூசிகளை பங்களாதேஷ் முற்பதிவு செய்து கோரியிருந்ததுடன், முதற்கட்டமாக இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக ஏற்றுமதி செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இந்தியாவிலிருந்து இன்று தமது நாட்டை வந்தடைந்துள்ளதாக மாலைத்தீவுகள் ஜனாதிபதியின் ஆலோசகர் மொஹமட் நஷீட் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிடமிருந்து கிடைக்கும் ஒரு இலட்சம் தடுப்பூசியை நாளை (21) தொடக்கம் தமது பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக நேபாள சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து 1,50,000 தடுப்பூசிகள் பிரித்தானியாவிற்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி திட்டத்தில் அயல்நாடுகளில் பிரதான பங்குதாரர் நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

உலக மக்களின் சுகாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக நீண்ட காலத்திற்குரிய நம்பிக்கைக்குரிய பங்குதாரராவது இந்தியாவிற்கு பாரிய கௌரவம் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில நாடுகளுக்கான கொவிட் தடுப்பூசி விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் மேலும் பல விடயங்கள் இடம்பெறும் எனவும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

மானிட சமூகத்திற்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அயல்நாடுகளுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், COVID சவாலை வெற்றிகொள்வதற்காக தமது நாட்டிற்கும் தடுப்பூசிகளை விநியோகிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அயல்நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு அமைய, இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் அண்மையில் நாட்டிற்கு வருகைதந்த போது தெரிவித்திருந்தார்.

எனினும், AstraZeneca தடுப்பூசிக்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதி இதுவரை கிடைக்காமையால், தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையிடம் வினவியபோது, Oxford–AstraZeneca எனப்படும் Covishield தடுப்பூசியை இலங்கைக்கு விநியோகிப்பதற்கு தேவையான ஆவணங்கள் நேற்று பகல் இந்தியாவினால் சமர்ப்பிக்கப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்தது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் அதற்கான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் கமல் ஜயசிங்க குறிப்பிட்டார்.

இந்தியாவிடமிருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இருநாட்டு அரசுகளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, COVID கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

எனினும், ரஷ்யாவின் தடுப்பூசிக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச ஔடதங்கள் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

ஏனைய தடுப்பூசிகள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதி நிறுவனங்கள் காணப்படுவதாகவும் அரச ஔடதங்கள் கூட்டுதாபனத்தின் பொது முகாமையாளர் K.M.D.R. திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்