இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இக் காலத்தில் தமிழ் மக்கள் தமது நலன்சார் வலுவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

அரசு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வேறு பல திணைக்களகங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகணத்தில் தனது வேலைத்திட்டத்தை தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது. இதனுடாக தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை இல்லாது செய்ய முனைகின்றது.

மறுபுறத்தில் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்காமல் தாமதப்படுத்துவதனுடாக அவ்விருதரப்பினர்களுக்குமிடையில் முரண்பாட்டை உருவாக்கின்றது.

இது போன்ற பல விடயங்களில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தினையும் உறுதிசெய்வதற்கு எதிர் வரும் 12.02.2022 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறும் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களும்; அரசியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளும் முதலாவது கருத்தரங்கில் கலந்துகொள்வதன் மூலம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி.

த.சித்தார்த்தன்,பா.உ.,
(யாழ் மாவட்டம்)
09/02/2022.