தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இன்று காலை கலந்துரையாடல் நடைபெற்றது. ரெலோ இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சமல் ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் அரச தரப்பில் பேச்சில் கலந்து கொண்டனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழர்களின் இனப்பிரச்சனை வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு, அரசுகள் ஏமாற்றி வரும் வரலாற்றை தெரிவித்ததோடு, 13ஆவது திருத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இரு தரப்பு கருத்து பகிர்வின் பின்னர், அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கை வெளியான பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை உத்தேசிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரத்தை கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது. கூட்டமைப்பினரிடம் நேற்று அரசியல் கைதிகள் விபரம் உறவினர்களால் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த விபத்தின் அடிப்படையில் 48 அரசியல் கைதிகள் 10 வருடங்களிற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும், இன்னும் பலர் வழக்கு தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்பு விவகாரங்களில் உடனடி நடவடிக்கையெடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதியளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சாட்சியம் உள்ளவர்கள் விடயத்தில் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு குறிப்பிட்டது.

வழக்கு தொடரப்பட்ட 48 தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை ஆராய்ந்து, சாதகமான முடிவொன்றை விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், வழக்கு தொடரப்படாமல் உள்ள அரசியல் கைதிகள் விடயத்தை நீதியமைச்சர் அலி சப்ரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூடி ஆராய்வதென்றும், ஒவ்வொருவரின் வழக்கையும் ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் கூட்டமைப்பினர் விலாவாரியாக எடுத்துரைத்தனர். இராணுவம் ஒரு பக்கமாகவும், தொல்லியல் திணைக்களம் ஒரு பக்கமாகவும், வனவள திணைக்களம் ஒரு பக்கமாகவும் காணி அபகரிப்பு செய்கிறார்கள், வயல் நிலங்கள், வணக்க தலங்கள், குடியிருப்புக்கள் என பல இடங்களை மக்கள் நுழைய தடைவிதிப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகலவிதமான காணி சுவீகரிப்பையும் நிறுத்த உத்தரவிடுமாறும், இது விடயமாக கூட்டமைப்புடன் கலந்துரையாடல் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பு கோரியது. அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கோள்ள தடையேற்படுத்தக் கூடாது என கூட்டமைப்பு தெரிவித்தது. புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக வடக்கு கிழக்கில் முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு தரப்பும் மீண்டும் சந்தித்து பேசுவதென்ற இணக்கப்பாட்டுடன் கூட்டம் முடிவடைந்தது.