கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சபாநாயகர் ஊடக பிரிவு இதனை அறிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் ஷூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.