ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவின் தலை நகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறித்து இலங்கை விமானப் படை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதில், தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் முழு அனுமதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு, சுங்கம் மற்றும் ஏனைய அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு ஜனாதிபதி மற்றும் அவரின் துணைவியார் ஆகியோர் மாலைத்தீவு நோக்கி செல்ல விமானம் ஒன்றை பெற்றுக் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை பாதுகாவலர்கள் இருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வௌியேறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.