வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரையில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்து வவுனியா வரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினரால் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று காலை 8 மணியளவில் குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிக்கோரி நேற்றைய தினமும் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் நல்லூரில் இருந்து வவுனியா வரையில் இன்று வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன் வாகனப் பேரணியின் நிறைவாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.