மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் இன்று நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். புறக்கோட்டையில் வைத்து பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை போன்ற விடயங்களை முன்வைத்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுங்க நிதியத்தை திறைசேரிக்கு உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்க அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சேவையில் இருந்து விலகியிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக சுமார் 4,500 கொள்கலன்கள் சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்றாகும். இதற்கென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் பாராளுமன்றம் இன்று காலை 9.30 க்கு கூடவுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.