இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த மேலும்  32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் வருவதை தடுக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த நிலையில், நேற்றிரவு யாழ்ப்பாணம்  – நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து  தமிழக மீனவர்கள்  25 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

தமிழக மீனவர்களின் மூன்று படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, இரண்டு படகுகளுடன் ஏழு தமிழக மீனவர்கள் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 மீனவர்களும்  மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் காங்சேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 23 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தலைமன்னாரில் கடந்த ஜனவரி 16  ஆம் திகதி கைப்பற்றப்பட்ட படகொன்றின் உரிமையாளருக்கு எதிரான வழக்கின் போது, கைது செய்யப்பட்ட ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மீனவர் படகு உரிமையாளர் ஆஜராக வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய, குறித்த நபர் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், வழக்கு விசாணை முடிவுறாத நிலையில் அவர்  கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், படகின் உரிமையாளர் குறித்த நபரின் மனைவி என்பது தெரியவந்த நிலையில் சந்தேகநபரை  விடுவித்த நீதிமன்றம்  குறித்த பெண்னை மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இதனிடையே, இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில்  மீனவர்கள்  ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம்,  யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து நேற்று முன்தினம் முதல் யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு   யாழ். தையிட்டி அன்னை வேளாங்கண்ணி கடற்றொழில் சங்கத்தினர் இன்று ஆதரவு தெரிவித்தனர்.