சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது, சபாநாயகர் செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. Read more
COPE குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா விலகியுள்ளார். COPE குழுவின் தலைவராக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமையினால் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். COPE குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இரான் விக்ரம ரத்ன, பேராசிரியர் ச்சரித்த ஹேரத், தயாசிரி ஜயசேகர, சாணக்கியன், S.M. மரிக்கார், காமினி வலேபோட, ஹேஷா ஆகியோர் ஏற்கனவே விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று மாலை கனடாவுக்கு புறப்பட்டு சென்றார். இந்த விஜயத்தின் போது அவர் இலங்கை மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்களை நடத்தவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி டொரன்டோவிலும் 24 ஆம் திகதி வென்கூவரிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளன.
மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் இன்று நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். புறக்கோட்டையில் வைத்து பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை போன்ற விடயங்களை முன்வைத்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுங்க நிதியத்தை திறைசேரிக்கு உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்க அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சேவையில் இருந்து விலகியிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக சுமார் 4,500 கொள்கலன்கள் சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜையின் போது கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். குறித்த வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட 08 பேரும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனை அறிவித்துள்ளார். இந்த அபிவிருத்திப் பணியின் மூலம், துறைமுகத்தினை 30 மீற்றர் ஆழப்படுத்தவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் பெரிய கப்பல்களை தரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன்படி, குறித்த தடை உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.