தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்பு-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றுமாலை 5.30 மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோ.கருணாகரன், என். சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், ராகவன், சிவநேசன் (பவன்) ஆகியோர் இந்த சந்திப்பில்; பங்கேற்றிருந்தனர். இதன்போது ஒவ்வொரு கட்சிக்கும் தலா மூவர்வீதம் பதினைந்துபேரை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை அமைப்பதென்றும், ஐந்துபேர் கொண்ட தேர்தல் நியமனக்குழு மற்றும் நிதிக்குழுவை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேர்தல் சம்பந்தமான விடயங்களை இந்த ஒருங்கிணைப்புக்குழுவும் நியமனக்குழுவும் கலந்து ஆலோசிக்குமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளில் 53ஐ நடைமுறைப்படுத்த நடவடிக்கை-அமைச்சர் ரம்புக்வெல்ல-

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் 53 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறியுள்ளார். இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, தேசிய செயற்பாட்டு யோசனைகளை உள்ளடக்குவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அவர் குறி;ப்பிட்டுள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்ட பிரச்சினை, மனித உரிமை, கைதிகளுக்கான உபசரிப்பு, உள்ளக இடப்பெயர்ந்தவர்கள், வட கிழக்கு முஸ்லிம் மக்களுக்கான பிரச்சினைகள் ஆகியவற்றை தீர்ப்பதற்கான யோசனைககளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய – வடமேல் மாகாண சபைகள் நாளை கலைப்பு-

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் நாளை கலைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் நாளை வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. மாகாண சபைகளை கலைப்பது தொடர்பான ஆவணங்களில் தாம் கையெழுத்திட்டு மாகாண ஆளுநர்களுக்கு கையளித்துள்ளதாக மத்திய மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், நாளை இரு மாகாணசபைகளும் கலைக்கப்படும் பட்சத்தில் செப்டம்பர் மூன்றாம் அல்லது இறுதிவாரத்தில் தேர்தல்கள் இடம்பெறலாமென கூறப்படுகிறது. ஜனாதிபதி அல்லது ஆளுநரால் மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒருவார காலத்தினுள் வேட்புமனு கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென தேர்தல் செயலகம் கூறியுள்ளது.

ஆஸி. பிரதமர் இந்தோனேசிய ஜனாதிபதி அகதிகள் குறித்து பேச்சு

அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் இன்று இந்தோனிசியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இருநாள் விஜயமாக அங்கு செல்லும் அவர் இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங்கை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் எனினும் தமது பயணத்தின்மூலம் உடனடியாக படகு அகதிகள் தொடர்பில் சிறப்பான முடிவுகள் எவையும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கவேண்டாம் என அவர் கூறியுள்ளார். இந்தோனேசியா புறப்படும் முன் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், இந்தோனேசிய ஜனாதிபதியுடன் படகு அகதிகள் தொடர்பில் பேச்சு நடத்தப்படும், எனினும் அவரிடமிருந்து முழுமையாக படகு அகதிகளை கட்டுப்படுத்தும் வகையிலான அறிவிப்பை எதிர்ப்பார்க்க முடியாது என கூறியுள்ளார்.

பயண எச்சரிக்கை குறித்து பிரிட்டனிடம் விளக்கம் கோரல்-

இலங்கைக்கு வருகைதரும் தமது நாட்டுப் பிரஜைகள் தொடர்பில், பிரித்தானிய வெளியுறவு செயலகம் வெளியிட்ட அறிவுறுத்தல் தொடர்பில் இலங்கை விளக்கம் கோரியுள்ளது. இந்த விளக்கம் கோரிய கடிதம் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைதரும் பிரித்தானிய பிரஜைகள், நாட்டில் இடம்பெறும் வன்முறைகள், ஆட்கடத்தல்கள், பெண்கள்மீதான வன்முறைகள் போன்றவை தொடர்பில் கவனமாக செயற்படவேண்டும் என பிரித்தானியாவின் அறிவுறுத்தலில் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பில் தாம் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் பதில் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

காணி பொலீஸ் அதிகாரங்கள் குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்-எஸ்.பி-

வட மாகாண சபை தேர்தலை நடத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்க வேண்டும். அதேவேளை, காணி, பொலீஸ் அதிகாரங்கள் தொடர்பிலான சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு தற்போது அவசரப்பட வேண்டிய அவசியமில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க, ஜே.ஆர். தமிழ் உறவு முறைகளைக் கொண்டவர்கள். சிங்களவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடனான உறவுமுறைகளை மூடி மறைப்பதாலேயே நாட்டில் இனங்களுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

 நோ பயர்சோன் திரைப்படம் காண்பித்தவர்கள் மலேசியாவில் கைது-

மலேசியாவில் நோ பயர் சோன் திரைப்படத்தை திரையிட்ட ஏற்பாட்டாளர்கள் மூவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் உள்ள சீன மண்டபம் ஒன்றில் இலங்கையின் போரை மையப்படுத்திய நோ பயர் சோன் திரைப்படத்தை காண்பித்தமை தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் திரைப்படம் முழுமையாக காணப்பிக்கப்பட்ட பின்னரே குடிவரவு அதிகாரிகள் மண்டபத்துக்குள் வந்து திரைப்படத்தை நிறுத்துமாறு கோரியதாகவும், திரைப்பட ஏற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தை மலேசிய அதிகாரிகள் வெளியிடவில்லை என்றும் மலேசிய மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அங்கு செல்லும் அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நாளை சந்திக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் இலங்கையின் விளக்கத்தை பசில் ராஜபக்ச எடுத்துக்கூறுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமைச்சர் பசில் ராஜபக்சவை இந்தியப் பிரதமரும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் இடைநிறுத்தம்-

கொழும்பு,சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது சாதாரண நிலையே என சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகி நீல் ஜயசிங்க தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் டீசல் சுத்திகரிப்பு பிரிவுகளில் திருத்தப் பணிகள் இடம்பெறுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டதால் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருந்தது. மீண்டும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் சிக்கல் என தேசிய சேவை சங்கத்தின் எரிபொருள் கூட்டுத்தாபன கிளை செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

13 குறித்து ஐ.தே.கட்சி அமெரிக்க தூதரக அதிகாரியுடன் பேச்சு-

ஐக்கிய அமெரிக்காவின் தூதரக அலுவலக அரசியல்துறை பிரதானி மைக்கல் ஹொனிஸ்டின் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர்க்கு இடையிலான சந்திப்பு இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 13வது திருத்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை என்பன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், ஐ.நா. கட்சியின் உத்தேச அரசியல் யாப்பு நகல் ஒன்றும் அமெரிக்க தூதரக பிரதானி மைக்கல் ஹொனிஸ்டினுக்கு திஸ்ஸ அத்தநாயக்கவால் வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு இளைஞர்களைக் கொலைசெய்யும் முயற்சி முறியடிப்பு-

முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை படுகொலை செய்வதற்காக மத்துகம பெலவத்த என்னுமிடத்திற்கு அழைத்துச் சென்றபோது அவ்விருவரையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீகஹதென்ன பொலீசார் சந்தேகத்தின்பேரில் நால்வரை கைதுசெய்துள்ளதாக கூறியுள்ளனர். முல்லைத்தீவு இளைஞர்கள் இருவரும் இரு தினங்களுக்கு முன்பே பணயக்கைதிகளாக களுத்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கவேண்டிய 16 இலட்சம் ரூபா கிடைக்கும் வரையில் இளைஞர்கள் இருவரும் களுத்துறை பயாகலயில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். 16 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுக்காவிடின் அவ்விருவரையும் கொலைசெய்ய பாதாள உலக கோஷ்டியினருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது. பணம் கிடைக்காமையினால்இருவரையும் கொலைசெய்வதற்கு மத்துகம பெலவத்தைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தபோதே வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலீஸ்குழு இவர்களை விசாரித்தமையினால் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்-

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சந்திரபால லியனகே தனது கடமைகளை இன்றையதினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சு அறிவித்துள்ளது.