இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலேயே அதனை பெற்றுக்கொடுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் வௌிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென அவர் கூறினார்.  வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடிவதோடு, அந்த தொகையை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 25,000 வாகன விபத்துகள் பதிவாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.

2021 ஆம் ஆண்டு 2,847 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், 2,557 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 21,953 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு, அதில் 2540 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு 24,634 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2,310 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டில் வாகன விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சற்று  குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.