ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளார். குறித்த முறைப்பாட்டை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார். அதன்போது ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கும் கருத்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி…..
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் காவல்துறைமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அல்லது உத்தரவிடப்படுமாயின் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரே நாட்டை பாரிய பிரச்சினைக்கு இட்டுச் சென்றதாக சுட்டிக்காட்டிய அவர், ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
தமது ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினருக்கு எதிராகவே தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கண்டியில் இடம்பெற்ற மத நிகழ்வின் போது தெரிவித்திருந்தார்.
அவர்கள் தொடர்பில் தகவலை வெளியிடும் போது அதனை மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டியது, நீதிபதிகளின் பொறுப்பாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியிருந்தார்.