இலங்கை – இந்திய பலமான உறவு தொடரும்-சர்மான் குர்சித்-

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தொடர்ந்தும் பலமான நட்புறவு காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு செயற்பாடுகளில் இந்தியா வினைத்திறனாக செயற்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் இலங்கை அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் இந்தியா அச்சமடையவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்டதூரம் சென்றுள்ள நிலையில் புதிய போட்டிகள் குறித்து இந்தியா வருத்தமடையாது என அமைச்சர் சல்மான் குர்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது-அமைச்சர் பசில்-

மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவது 1987ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரானது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை உடன்படிக்கையின் 2ன் கீழ் 10ம் சரத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதியை பலப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், மத்திய அரசின் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்புகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, முழு இலங்கைக்கும் ஒரே காவற்துறையே தவிர, இரண்டு காவற்துறை பிரவுகள் இருக்க முடியாது. இந்நிலையில், இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக காவற்துறை அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 
 
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் விஜயம்-

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இந்த பிரதிநிதிகள் குழு விஜயம் செய்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் கண்காணித்ததுடன் சமூக நல்லிணக்கம் தொடர்பிலான விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர். இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய மாநாட்டை கெவின் ரட் புறக்கணிக்க வலியுறுத்தல்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாட்டை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின் ரட்டிடம் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கத்தை கருத்திற் கொண்டு கெவின் ரட் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எலெக்ஸ் வார்ட் தெரிவித்துள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள கெவின் ரட் எடுக்கும் தீர்மானங்கள் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை கேளிக்கையாக்குவதாக அமைந்துவிடக் கூடாதென அவர் கூறியுள்ளார். சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது. குறிப்பாக மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளது. இப்படியான நிலையில் கொழும்பில் பொதுநலவாய மாநாட்டினை நடத்துவது, இலங்கையின் குற்றங்களை மன்னிப்பதாக அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
ஆஸி வருவோர்க்கு புகலிடம் வழங்கப்படமாட்டாது – கெவின் ரட்-

எதிர்காலத்தில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்பவர்களுக்கு புகலிடம் வழங்கப்படமாட்டாது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார். படகுமூலம் வருகை தரும் அனைத்து புகலிட கோரிக்கையாளர்களும் பப்புவா நியுகினியா தீவுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புகலிடம் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகளை அறிவித்த போதே அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு இல்லை-

வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் வடமாகாண சபை தேர்தலை கண்காணிக்காது என்றும் அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலே தூதுக்குழுவின் தலைவர் ஜீன் லம்பட் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைத்தேர்தல் நடத்துவதையிட்டு சந்தோஷமடைகின்றோம். அங்கு நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பாகும். ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தல்களை மட்டுமே கண்காணிக்கும். எனினும், வடக்கு தேர்தலை கண்காணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 
 
வடக்கில் பிறப்புச் சான்றிதழ்பெற 2236பேர் விண்ணப்பம்-

வட மாகாணத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவையில் கடந்த ஆறு நாட்களில் 2236 பேர் பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனர். கபே இயக்கம், இலங்கை மனித உரிமைகள் கேந்திரம், வட மாகாண அனைத்து பிரதேச செயலாளர் அலுவலகங்கள் என்பவற்றின் ஒத்துழைப்பில் இந்நடமாடும் சேவை இடம்பெறுகிறது. கிளிநொச்சி, வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களை முன்னிலைப்படுத்தி இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதிவரை கிளிநொச்சி -கரச்சி பிரதேச செயலர் வலயத்திற்குள் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் 1584 பேர் பிறப்புச் சான்றிதழுக்காக விண்ணப்பித்ததுடன், ஜூலை 16 தொடக்கம் 18வரை யாழ். மாவட்டத்தில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் இதுவரை 649 பேர் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளனர். பிறப்பு அத்தாட்சி பத்திரம் இன்றி இப்பிரதேசங்களில் பலர் நீண்டகாலமாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தப்படாததால் இந்நிலை தோன்றியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிறப்புச் சான்றிழ் இன்றி அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாதிருந்த இம்மக்களுக்கு இதுவரை காலமும் வாக்குரிமையும் இல்லாதிருந்ததாக கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனால் இத்திட்டத்தை எதிர்காலத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.