புளொட் முக்கியஸ்தர் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு விஜயம்-
 புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இன்றையதினம் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார். அவர் இந்த விஜயத்தின்போது ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் திரு. திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களையும், கல்லூரியின் நிர்வாகத்தினரையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து கல்வி செயற்பாடுகள், மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மாணவர்களின் கல்வி நிலைமைகளைக் கேட்டறிந்த அவர், எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகளை நடாத்துவதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் வறிய மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கற்றல் உபகரணங்கள் சிலவற்றையும் அவர் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்.
புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இன்றையதினம் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார். அவர் இந்த விஜயத்தின்போது ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் திரு. திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களையும், கல்லூரியின் நிர்வாகத்தினரையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து கல்வி செயற்பாடுகள், மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மாணவர்களின் கல்வி நிலைமைகளைக் கேட்டறிந்த அவர், எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகளை நடாத்துவதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் வறிய மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கற்றல் உபகரணங்கள் சிலவற்றையும் அவர் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார். 
இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி-
இந்திய இராணுவத்தால் 1987ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச் சுடரை வைத்தியசாலையின் வைத்தியர்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி பவானந்தராஜா, தாதியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம்-
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக 17 தற்காலிக ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களாக பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் தம்மை திடீரென பணிநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தாம் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். புதிய ஊழியர்களுக்கான நியமனம் வழங்குவதிலும் முறைகேடு இடம்பெற்றுள்ளது எனவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், இவர்கள் நாளாந்த சம்பள அடிப்படையிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும், உயர்கல்வி அமைச்சிடமிருந்து கிடைக்கும் பெயர்ப் பட்டியலுக்கு அமையவே ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மாநாட்டில் கனடா பங்கேற்க வேண்டும்-கனேடிய முன்னாள் பிரதமர்-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை கனடா புறக்கணிக்கக் கூடாது என கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளை ஏனைய நாடுகள் இணைந்து பேசி தீர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கனடா பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் கனடாவின் 146 வருட ஜனநாயக பண்புகளை உள்நாட்டிலும் வெளி நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வது எவ்வாறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 1961ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய கனேடிய பிரதமர் ஜோன் டைபென்பேக்கர் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதை கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி நினைவுபடுத்தியுள்ளார். இதன் காரணமாக தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளிலிருந்து விலகி, 1990ஆம் ஆண்டு நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்து கொண்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கனடா இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் –
இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்கா இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனமும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நனோ தொழில்நுட்ப சிறப்பு மையம் என்ற பெயரில் ஜூன் 2012 இல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு ஹோமாகம பிட்டிப்பனவில் 50 ஏக்கர் காணியில் 2018.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டும் உள்ளது. இதற்காக அரசாங்கம் 1771.5 மில்லியன் ரூபாவையும் 310 மில்லியன் ரூபாவை தனியார் துறைப் பங்குதாரர்களான மாஸ் பிரன்டிக்ஸ் டயலொக் ஹேய்லிஸ் லொடிஸ்டர் மற்றும் லங்கம் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. மேலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் உலக சந்தைத் தரத்திற்கு ஏற்ப புதிய இயற்கை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளை விஸ்தரித்தல் உள்நாட்டு சர்வதேச பிரச்சினையான விவசாயம் உடல்நலம் சுகாதாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் தீர்வுகாணல் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துதல் போன்றன இவ்மையத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மக்கள் பார்வைக்கு-
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள இந்தப் பாதையினை நாளைமுதல்; 24ஆம் திகதிவரை பொதுமக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினூடாக பயணிப்பதற்கான கட்டணங்கள் பற்றிய சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இவ் அதிவேகப் பாதையினூடாகச் செல்லும் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் அறிவிக்கப்படுமெனவும் இப் பாதையினூடாக பயணிப்பதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பாக வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் அமைச்சினால் அறிவூட்டப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 20நிமிட நேர இடைவேளையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லக்கூடிய அதிவேகப் பாதையினூடாக தினமும் 15ஆயிரம் வாகனங்கள் பயணிக்க முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
