Header image alt text

யாழ். ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்-

IMG_4146இராணுவத்தினரால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படலாம் என யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றுபகல் இந்த ஊடகவியலாளர்கள் ஐவரும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜிடம் தமது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். முறைப்பாடு செய்ததன் பின்னர் மேற்படி ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், வலி.வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் இராணுவத்தினரால் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து நேற்று அங்கு நாம் சென்றிருந்தோம். அங்கு உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் உள்ள வீடுகளை இராணுவத்தினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி கொண்டு இருந்தார்கள். அதனை நாம் ஒளிப்படம் எடுத்தோம். அதனை அவதானித்த இராணுவத்தினர் எம்மை சுற்றிவளைத்து எம்மிடம் இருந்த ஒளிப்பட கருவி, ஒலிப்பதிவுக்கருவி என்பவற்றை பறித்து அதில் இருந்த சகலவற்றையும் அழித்தனர். அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக ஏதாவது படங்களோ செய்திகளோ ஊடகங்களில் வெளியானால் அதன் பின்னர் நடப்பதே வேறு அதன் பின்னர் நாம் இராணுவ பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என தன்னை இராணுவ பிரிகேடியர் என அறிமுகம் செய்த இராணுவ அதிகாரி மிரட்டியிருந்தார். நேற்றைய இச்சம்பவம் தொடர்பான செய்திகள், படங்கள் என்பன இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனால் இராணுவத்தினரால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்பதனால் நாம் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேற்படி ஊடகவியலாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் மற்றும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களுடன் நேற்று கட்டுவன் பிரதேசத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.IMG_4147IMG_4124IMG_4135IMG_4137

இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ் நூலகம் தெரிவு-

jaffna libraryஇலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள நூலகங்களுக்கு இடையில் போட்டி நடாத்தப்பட்டது. இதன்படி அகில இலங்கை ரீதியில் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகரசபைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட நூலகப் போட்டியில் யாழ்ப்பாண நூலகம் முதலாம் இடத்தைப்பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான உறவை தொடர்வது அவசியம்: மணிசங்கர் ஐயர்-

indiaஇலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம் என தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இருவேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில், மணிசங்கர் ஐயர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பிரதமர் உட்பட யாரும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் பங்கேற்பது அவசியம் என வலியுறுத்தினார். அதேபோல் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் தங்காபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரித்தானிய பல்கலைக்கு பிக்குகள் சங்கம் எதிர்ப்பு

மீரிகம பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்;ள பிரித்தானிய லான்கஷெயார் பல்கலைக்கழகத்தின் கிளைக்கு சோசலிச பிக்கு முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திற்கு கோரிக்கை மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய பல்கலைக்க ழகத்திற்கான அடிக்கல்லை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் நாட்டி வைப்பார் என்ற செய்தியை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்;; மறுத்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை சேர்க்க நாளை வரை கால அவகாசம்-

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இதுவரை தமது பெயர்களை சேர்த்துக்கொள்ளாதவர்கள் அது தொடர்பான உரிமைக் கோரிக்கையினை முன்வைப்பதற்கு தேர்தல்கள் செயலகம் வழங்கிய காலஅவகாசம் நாளையுடன் நிறைவு பெறவுள்ளது இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஏதேனும் ஒரு தேர்தல் நடாத்தப்படுவதாயின் அதற்காக 2013 ஆம் ஆண்டிற்கான தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. தேர்தல் ஒன்றின்போது வாக்காளர் இடாப்பில் பெயர் சேர்க்கபடவில்லை என்று முறைப்பாடு செய்தாலும் வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்பட்ட பின்னர் புதிதாக எந்தவொரு பெயரையும் உட்சேர்க்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயரைச் சேர்த்துக்கொள்வதற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக தத்தமது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

இந்தியாவின் பங்கேற்பை தடுக்க கோரும் மனு தள்ளுபடி-

law helpஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

கப்பல் கூட்டுத்தாபன தலைவராக வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே நியமனம்-

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். வைஸ் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தற்போது இலங்கை கடற்படை தளபதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இனவாதத்திற்கு சாதகமாக அமைந்துவிடும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார –

அரசாங்கத்தின் தலையீட்டுடன் தொகை தொகையாக வட மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதை எதிர்க்கின்றேன். ஆனால், சிங்கள மக்களாகட்டும், தமிழ் மக்களாகட்டும் அனைவரும் சுயவிருப்பதோடு எங்கும் வாழலாம். அதனை தடைசெய்ய முடியாது 
சிங்கள மக்கள் தமது வர்த்தகம் மற்றும் தொழில்கள் நிமித்தமும், சுயவிருப்பத்துடனும் வடக்கில் குடியேறுவதை தடுப்பதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
வடக்கு முதலமைச்சரின் அந்த நிலைப்பாட்டை எதிர்க்கின்றேன். வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக அவ்வாறான ஒரு நிலை உருவானால் தெற்கிலும் தமிழ் மக்கள் வந்து குடியேற முடியாது. அதற்கு இடமளிக்கமாட்டோம் என சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் கிளம்பும்.
இது மீண்டும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இனவாதத்திற்கு சாதகமாக அமைந்துவிடும்.
எனவே, சிங்கள மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் வடக்கில் மட்டுமல்ல எங்கும் வாழமுடியும். அதேபோன்று தமிழ் மக்களும் தமது சுயவிருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடைபோட எவருக்கும் அதிகாரம் இல்லை.
வடக்கில் மக்கள் வாழும் இடங்களில் இராணுவ நடமாட் டத்தைத் தடைசெய்ய வேண்டும்.
இராணுவத்தினர் அவர்களுக்குரிய இடங்களில் இருக்க வேண்டும். அத்தோடு, சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தினரின் தலையீட்டை இல்லாது செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரிவினர் நடமாடலாம். ஆனால், இராணுவச் சீருடையுடன் மக்கள் மத்தியில் நடமாடுவதென்பது, மக்கள் மத்தியில் அச்சத்தையும், தாம் இராணுவ மயமாக்கலுக்குள் சிக்கியிருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
வடக்கிற்கு அரசாங்கம் ஜனநாயகத்தை வழங்கியுள்ளது. அதனை சுவாசிக்க மக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு மாகாண சபை முதலமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, வடக்கு முதலமைச்சருக்கும் அதே நிலைதான்.பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதா? இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.
இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.