Header image alt text

நெடுங்கேணி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பங்கேற்பு-

IMG-20131022-00077வவுனியா நெடுங்கேணி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இதில் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வவுனியா வடக்கு பிரதேசத்தில் செயற்படுத்தப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், பிரதேச சபையின் நடவடிக்கைகள் பற்றியும் ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் பிரதேச சபை உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

தமிழர் பிரச்சினையில் இலங்கை ஆக்கபூர்வமாக செயற்படவில்லை-இரா.சம்பந்தன்-

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும். இந்த விவகாரத்தில் இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன், சென்னையிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து அவ்வலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை. 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தை இலங்கை அரசு முற்றிலுமாக கைவிடவில்லை. இதில் திருத்தத்தை மாற்றும் முயற்சி முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆலோசித்து சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு எதுவுமற்ற நிலையில் சன் சீ கப்பல் அகதிகள்-

சன் சீ கப்பலில் கனடா சென்றடைந்த இலங்கை தமிழ் அகதிகளின் அவலங்களுக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை என கனடாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கப்பலில் பயணம் செய்த மேரி கிறிஸ்துராஜ் என்ற பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கிய அதிகாரிகள், அவரது கணவருக்கு அகதி அந்தஸ்து மறுத்துள்ளனர். இதனால் குணா கிறிஸ்துராஜ் என்ற குறித்த நபர் நாடு கடத்தப்பட உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சன் சீ கப்பலில், 492 இலங்கை அகதிகள் கனடாவைச் சென்றடைந்தனர். இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை தமிழ் அகதிகளின் மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர்களின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை செல்ல வேண்டாம் என பிரித்தானிய தொழில்கட்சி அழுத்தம்

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை உரிய நடவடிக்கை எடுக்காததை கருத்திற் கொண்டு பிரித்தானிய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிற் கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் எலக்சேன்டர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டு பிரித்தானிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டிற்குச் செல்லக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். டேவின் கெமரூன் தனக்கு பதிலாக சிறிய அமைச்சர் ஒருவரை அனுப்பினால் தொழிற்கட்சி அவருக்கு ஆதரவு வழங்கும். கனடா இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறது. இந்தியா இது குறித்து கவனம் செலுத்தி வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க தடை கோரி வழக்குத் தாக்கல்-

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பேராசிரியை சரஸ்வதி கோவிந்தராஜன் என்பவர் இந்த பொதுநல மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். மனுவில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் இது குறித்து தனக்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரசாயன வாயு கசிவு: 70 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி-

கொழும்பு பிலியந்தலை பகுதியில் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியான இரசாயன வாயுவின் காரணமாக தொழிற்சாலைக்கு அருகில் வசித்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் களுபோவில பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பிலியந்தலை பொலிஸார் விசாரணைகள் நிறைபெறும் வரையில் குறித்த தொழிற்சாலை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கென்யா ஆலோசனை-

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க கென்யா ஆலோசனை செய்து வருகின்றது. இந்நிலையில், ஏனைய ஆபிரிக்க நாடுகளும் இதனை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கென்யா விடுத்து வருகின்றது. எனினும் ஏனைய ஆபிரிக்க நாடுகள் கொழும்பு மாநாட்டில் பங்குகேற்பதாக தீர்மானித்துள்ளன. கென்யாவின் ஸ்டார் என்ற இணையத்தளம் இந்த செயதியை வெளியிட்டுள்ளது. கென்யாவின் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுககு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்திலேயே கென்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர்பட்டியல் தொடர்பான ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்-

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை முறையிடுவதற்கு எதிர்வரும் 30ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. தற்போது இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராமசேவையாளர் காரியாலயம், பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், அத்துடன், மாவட்ட தேர்தல் காரியாலயங்கள் ஆகியவற்றில் தற்போது வாக்காளர் பெயர்பட்டியல்கள் திருத்தத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர் பெயர் பட்டியலில் இதுவரை தமது பெயர்கள் உள்ளடக்கப்படாதவர்கள் அதற்கான கோரிக்கையை விடுக்கவும், தகுதியானவர்கள் தமது பெயர்களை உள்ளடக்குவதற்கும், பெயர்களின் மாற்றங்கள் இருப்பின் ஆட்சேபனைகளை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களின் பொருட்டு 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கை வருவோர்க்கு ஆபத்து இருப்பதாக மனித உரிமைக்குழு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாக அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்று நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர்  கில்லியான் ட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளினால் இவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் அத்துடன் அவுஸ்திரேலியாவின் புதிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்திருத்தங்கள் அவர்களை மேலும் சிக்கல்களுக்குள் ஆழ்த்தியுள்ளது. எவ்வாறான வழிகளில் அவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தாலும் சகலரும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டியது அவசியமானது. எனினும் அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள் சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த நியதிகளுக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் 6579பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1428 பேர் சிறுவர் சிறுமியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 
 
கொழும்பில் ஹலாலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்-

பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிரான பேரணி இன்று காலை 9 மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு-06, கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இப்பேரணி ஆரம்பமாகியுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை செல்லும் இப்பேரணி அங்கு விசேட சமய வழிபாடுகளின் பின்னர் நிறைவடையவுள்ளது.