குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் அவசர தொலைபேசி சேவை அறிமுகம்-

dகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அவசர தொலைபேசி சேவையொன்றினை அறிமுகம் செய்துள்ளது. 1962 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புகொள்ள முடியும் என தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தொலைபேசி சேவையின் ஊடாக கடவுச்சீட்டு உள்ளிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்கள்-

cவடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இம்மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படும். நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதுடன் இப்பணிகளை 2015இல் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. படகுகள் நங்கூரமிடல் களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கையின் சகல மீன்பிடித் துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சு கூறியுள்ளது.

சென்னை பேச்சுவார்த்தைக்கு வடபகுதி மீனவ பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை-

bஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை இன்று தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி சென்னையில் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தேசிய மீனவர் பேரவையின் பொதுச் செயலாளர் இளங்கோவன் தெரிவித்திருந்தார். இந்திய மீனவர்களினால் தென்பகுதி மீனவர்களை விட வடபகுதி மீனவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். அந்த வகையில், வடபகுதி மீனவர்கள் சார்ந்த பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அப்பிரச்சினைகளுக்கான தீர்வு சரியான முறையில் கிடைக்காது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைக்கு தென்பகுதி மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தால் வட மாகாண மீனவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், வட மாகாண மீனவர்களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இலங்கை – இந்திய கடற்பரப்பில் எல்லைகள் கிடையாது என இளங்கோவன் தெரிவித்திருந்தார். நான் கேட்கிறேன், அவ்வாறு எல்லைகள் இல்லாவிட்டால், ஏன் இருநாட்டு மீனவர்களையும் கைதுசெய்ய வேண்டும்? கைது செய்யாமல் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கியிருக்கலாமே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.