இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தூதுவர் சந்திப்பு-

imagesஇந்தியாவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்சன சேனவிரத்னே (65) டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். அப்போது, இலங்கைத் தூதராக நியமிக்கப்ட்டுள்ளதற்கான ஆணையை அவர் பிரணாப் முகர்ஜியிடம் முறைப்படி நேற்று அளித்துள்ளார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைத் தூதுவர் மட்டுமின்றி, இஸ்ரேல், உருகுவே, கானா, லாவோ ஆகிய நாடுகளின் தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் தங்கள் நியமன ஆணைகளை குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவன் கடத்தல் தொடர்பில் புலனாய்வு பிரிவினரும் விசாரணை-

siruvan kadaththalகுருநாகல் நிக்கவெரெட்டிய கடுகம்பொல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் நான்கு வயது மகனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் குழுக்கள் விசாரணை செய்துவரும் அதேவேளை குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை சிறுவன் வசித்து வந்த பிரதேசத்திற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி இரவு சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் குறித்த வர்த்தகரின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வர்த்தகர் மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். எவ்வாறாயினும் இந்த கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதேவேளை, குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா சென்ற பயணிகள் பஸ்மீது தாக்குதல்-

vavuniya sentra payanikal busகொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்மீது நேற்றிரவு 10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா டிப்போவுக்கு சொந்தமான பயணிகள் பஸ்மீதே புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 4ஆவது மைல்கல் பகுதியில் வைத்து மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் புத்தளம் பொலிஸார் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் விபத்தில் படுகாயம்-

925635413accsi.Crash-Generic-300x225கிளிநொச்சி குடமுறுட்டி பாலத்தடியில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் வாகனம் குடை சாய்ந்ததில் வலயக் கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரியில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் பூநகரி – பரந்தன் வீதி வழியாக வலயக் கல்விப் பணிமனைக்குத் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் பணிப்பாளர் படுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சகோதரர்கள் கைது-

akkaraipatru thuppakki pirayokamஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, வெள்ள பாதுகாப்பு வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியக பிரதம இன்ஸ்பெக்டர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபர்களை நேற்று கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை குற்றப்புலனாய்வுப் பணியக பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சகோதர்களான இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை- ஹெல உறுமய-

ஏழு அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் தலைமையில் இதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜாதிக்க ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த குழுவினரால் தயாரிக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு சட்டம், அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்றும் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாடு-

ilankaiyil aasia arasiyal katsikalinஆசிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தொனிப்பொருளின் கீழ் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இந்த மாநாட்டில், ஆசிய வலயமைப்பை சேர்ந்த 33 நாடுகளின் அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.