சர்வதேச விசாரணை குழுவுக்கு பான்கீ மூன் ஆதரவு-

pan ki munஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ முன் முழுமையான ஆதரவினை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரிக் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினால் இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின்மூலம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழியேற்படும். அதனடிப்படையில் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என பேச்சாளர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம்-

thamil thesiya koottamaippu indiaதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நாளைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை இந்தியா செல்லவுள்ளதாகவும், அங்கு நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் விரிவாக பேசப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மேலும் செய்திகளை வாசிக்க………….
மருத்துவமனைகளில் பணிகள் ஸ்தம்பிதம்-

maruththuva manaikalil panikalசுகாதார சேவையின் சிற்றூழியர்கள் இன்றையதினம் ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தின் காரணமாக பல மருத்துவமனைகளின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அகில இலங்கை சுவசேவா சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிற்றூழியர்கள் இன்று காலைமுதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர். இதேவேளை, ஒன்றிணைந்த சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிற்றூழியர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக பல வைத்திய சாலைகள் பாதுகாப்பு தரப்பினரை கொண்டு இயக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்திலிருந்து இலங்கை வர முயற்சித்த இலங்கையர்கள் கைது-

தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக வருவதற்கு முயற்சித்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸிலிருந்து தமிழகத்துக்கு வந்திருந்த இலங்கையரான 54வயதான பிரான்ஸில் அந்தோனி என்பவரை படகுமூலம் தலைமன்னாருக்கு அழைத்துவர முயற்சிக்கப்பட்டுள்ளது. இலங்கையர் ஒருவரும் இன்னொருவரும் மேற்படி நபரை சட்டவிரோதமாக அழைத்துவர முயன்றுள்ளனர். அவரை படகுமூலம் அனுப்புவதற்காக மண்டபம் முகாமில் இருந்த சண்முகம் என்பவர் 40ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் அவரை படகுமூலம் அழைத்துச்சென்று நடுக்கடலில் உள்ளுர் மீனவர்களிடம் ஒப்படைத்துவிட்டு குறித்த படகுகாரர் தமிழகம் திரும்பியுள்ளார். இந்நிலையில் உள்ளுர் மீனவர்கள், பிரான்ஸிஸ்ஸை தலைமன்னாருக்கு அழைத்து செல்லாமல் மீண்டும் கோடியாக்கரை கரையோரத்துக்கு கொண்டுசென்று சேர்த்துள்ளனர். இதனையடுத்து அவரை கைதுசெய்த தமிழக பொலிஸார் விசாரணையின் பின்னர், படகு உரிமையாளரையும் இலங்கை தமிழ் அகதியையும் கைது செய்துள்ளனர்.

வவுனியா தமிழ் கிராமத்தில் சிங்கள குடியேற்றம்-

வவுனியா, கள்ளிக்குளம், பெரியபுளியங்குளம் என்ற தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அண்மைக் காலமாக பல தமிழ் கிராமங்களில் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியில் இன சிதைப்பை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமான கள்ளிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பெரியபுளியங்குளத்தில் 300 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இக்கிராம மக்கள், பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்து இன்று பல இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமன்றி அவர்களின் பல விவசாய நிலங்களும் இப்பகுதியில் உள்ளநிலையில் இக்குடியேற்றம் இடம்பெறுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசினால் வவுனியா மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அரச உயரதிகாரிகள் துணை போகின்றனர். தற்போது சிங்கள குடியேற்றம் செய்யப்படும் பெரியபுளயங்குளம் கிராமத்தில் வீதிகள், வீட்டு வசதிகள் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் அருகில் உள்ள கள்ளிக்குளத்தில் கடந்த 4 வருடங்களாக மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களுக்கு எவ்வித அடிப்படை வதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.