நாடு கடத்தல் தொடர்பில் இலங்கையுடன் ரஷ்யா உடன்படிக்கை-

நாடு கடத்தல் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் நாடு கடத்தல் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அந்நாட்டு நீதியமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் தகவலை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இவ்வாறானதொரு உடன்படிக்கையை செய்துகொள்ள இலங்கை அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கையின் பின்னர் இரு நாடுகளிலும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பரஸ்பரம் இடமாற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சம் கோரி ஆஸி. செல்வோரை கம்போடியாவுக்கு அனுப்ப முடிவு-

படகுமூலம் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. படகுகள்மூலம் விசா இல்லாமல் வந்தவர்களையும் நௌரு, மனுஸ், பப்புவாநியூகினியா தீவுகளில் உள்ளவர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்க்கான ஒப்பந்தந்தம் செய்துள்ளதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இந்நடவடிக்கைக்கு ஆஸி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஆனால் கிலாரட் பதவியில் இருந்தபோது புகலிடம் கோரியவர்களை மலேசியா அனுப்பியது போன்ற நடைமுறைதான் இதுவும் என மொரிசன் விளக்கியுள்ளார். இதேவேளை, இந்நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கம்போடியாவில் அகதிகள் வாழ்வதற்கான சரியான சூழலும் இல்லை என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க… 

23 எறிகணை குண்டுகள் மீட்பு-

யாழ் சாவகச்சேரி, சரசாலை பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 120 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் 23, நேற்றையதினம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறியுள்ளனர். பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்யும்போது குண்டுகள் இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர்கள், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்திருந்தார். அதற்கிணங்க இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று எறிகணைகளை மீட்டதாக சாவகச்சேரி பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வட மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது-

ரயில் தடம்புரண்டதால் தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்க ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், நேற்று மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதால் வடக்கு மார்க்கத்திற்கான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. எனினும் ரயிலை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணிகள் நேற்றிரவு 10.45 க்கு நிறைவடைந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

கந்தளாய் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

திருகோணமலை, கந்தளாய் – 91ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கடற்படையினருக்குச் சொந்தமான பஸ்சொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடற்படையின் பஸ்சொன்றும், நேரெதிரே பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே விபத்துக்குள்ளாகின. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மீதான ஐ.நா விசாரணை அளவுக்கு அதிகமானது – ஜனாதிபதி

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றும் அளவுக்கு அதிகமானது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்திற்க்கு பிந்திய இலங்கை ஐ.நா மனித உரிமை பேரவையில் உள்ள சிலரின் தீய நோக்கத்திற்கு துரதிஸ்டவசமாக பலியாகியுள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாடு எட்டியுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மனித உரிமை பேரவை கணக்கிலெடுக்கவில்லை. இலங்கை சில தீய சக்திகளால் அளவுக்கு அதிகமாக இலக்கு வைக்கப்படுகின்றது. இலங்கையை விட உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய பாரிய பிரச்சினைகள், விடயங்கள் உள்ளன. ஒரு நாட்டின் இறைமையை கணக்கிலெடுக்காது உலக நாடுகள் அந்நாட்டு விடயங்களில் தலையிடுவது சிறந்ததல்ல. ஐ.நா மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகள் நியாயமற்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும். நிதி உதவிகளை வழங்கும் தரப்பினரின் பணயக் கைதியாக ஐ.நா அமைப்பின் நிறுவனங்கள் செயற்படுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியான சவால்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு எதிராக தன்னிச்சையான பொருளாதார தீர்மானங்களை இலங்கை எதிர்க்கிறது. நாடுகள் தொடர்பிலான விவகாரங்களின் போது ஐ.நா அமைப்பின் முகவர் நிறுவனங்கள் கடுமையான கொள்கைகளை பின்பற்றுவதனை தவிர்க்க வேண்டும். கியூபாமீது ஏதேச்சாதிகார போக்கில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமை நியாயமற்றது. பயங்கரவாதம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பயங்கரவாதம் காரணமாக ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை இலங்கை நன்கு உணர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும். இலங்கையின் சகல மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிரிகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகம் காத்திரமான வகையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.