அராலி மத்தி, ஊரத்தி கிராமத்தில் குடியிருப்பாளருக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு-
வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் வலி மேற்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள அராலி மத்தி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ஊரத்தி கிராமத்தில் அமைந்;துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான காணி குடியிருப்பாளருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் நடவடிக்கைகள் நேற்று 27.09.2014 சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி காணியானது பிரதேச சபைக்கு சொந்தமான காணியாகும் இக்காணியில் ஏறத்தாள 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர் இந்நிலையில் இப்பகுதி மக்கள் தமக்கு குடியிருக்க நிரந்தர காணியற்ற நிலையில் இக்காணிகளை பங்கீடு செய்து தரும் பட்சத்தில் எதிர்காலத்தில் வழங்கப்படும் உதவிகளை பெற்று வாழ்வாதாரத்ததினை உயர்த்த முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் இக் காணிகளை பங்கீட செய்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது. இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தெரிவு: நாளை பதவியேற்பு-
தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு நாளையதினம் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை, லோயிட்ஸ் வீதியில் அமைந்துள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழக சட்டசபை அ.தி.மு,க., தலைவராக தமிழக அரசின் தற்போதைய நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் நாளையதினம், ஆளுனர் மாளிகையில் நடைபெற உள்ள ஒரு விழாவில் முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளார். இதன்போது முக்கிய அமைச்சர்களும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஐ.நா செயலர் பான்கீ மூன் ஜனாதிபதி சந்திப்பு-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூனை சந்தித்துள்ளார். நியூயோர்க் பகுதியிலுள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் இச்சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது நாட்டில் இடம்பெறும் அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி, பான்கி மூனுக்கு விளக்கமளித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பிலும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் எடுத்துக் கூறியுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடனும் இலங்கையில் வெற்றிகரமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பான் கீ மூன் இந்த சந்திப்பில் இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு மற்றும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விசாரணை தொடரும்-ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு-
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விசாரணை விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகள் மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். தற்போது சர்வதேச விசாரணைக் குழு, தங்களின் விசாரணைக்கு அவசியமான ஆவணங்களை திரட்டி வருகின்றது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.