முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு காலமானார்-
யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதியான மு.திருநாவுக்கரசு அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இவர் தமிழின்மீதும் சைவத்தின்மீதும் அதிக பற்றுக் கொண்டவர் மாத்திரமல்லாமல் தமிழ் தேசியத்துக்காக 70களில் தொடக்கம் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் பிரசாரக் கூட்டங்களிலே மிகத் தீவிரமாக பங்காற்றி வந்தவர். இவர் மக்களைக் கவரக்கூடிய விதத்திலே அழகான தமிழிலே மிகவும் அழகாகப் பேசக்கூடிய ஒருவர். அன்னாருடைய இழப்பானது தமிழ் மக்களுக்கு ஒரு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் அண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வநாயகம் அவர்களின் ஞாபகார்த்தக் கூட்டத்திலே ஞாபகார்த்த உரையினை நிகழ்த்தியிருந்தார். இவர் தான் சரியென்று கருதுகின்ற விடயங்களை எவருக்குமே அஞ்சாது அது தொடர்பான கருத்துக்களை மக்களிடம் எடுத்துக்கூறி வந்தவர். இவர் அரசியலில் மாத்திரமல்லால் சைவப் பிரசங்கங்களிலும் சிறந்து விளங்கி மக்கள் மத்தியிலே பெருமதிப்பைப் பெற்றிருந்தவர். அன்னாருக்கு புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது அஞ்சலியை செலுத்துவதுடன், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாவட்ட நீதிபதி மு. திருநாவுக்கரசு அவர்களுக்கு அஞ்சலி-
சுகயீன காரணத்தினால் இன்று காலமான யாழ். அளவெட்டியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது அஞ்சலியினைச் செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில், அமரர் மு. திருநாவுக்கரசு அவர்கள் ஒரு சமூகப் போராளியாக தமிழ் சமூகத்தையும், தமிழ் இளைஞர்களையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக பாடுபட்டவர். அவர் கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் உணர்வினையும், தமிழர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென்ற யதார்த்தத்தையும் ஏற்படுத்தியதுடன், அதற்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தவர். இளைஞர்களை ஊக்குவிப்பதில் என்றும் சளைக்காத அவர், சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதிலே முன்னின்று செயற்பாட்டார். அவரால் விகடகவி என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகள் தமிழ் சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாகும். அன்னாரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும், உறவினர் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரியபடுத்திய ஒருவர் என்றால் மிகையாகாது.- கலாநிதி .ந. குமரகுருபரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் கருத்து நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவிக்கப்படவுள்ளது. மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கோரியுள்ளார். அதன்படி உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இது குறித்து விளக்கக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கமைய சுமார் 40க்கும் மேற்பட்ட விளக்கக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றை ஆராய்ந்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட நீதியரசர்கள் நாளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவுள்ளனர் இதேநேரம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பவிருப்பதாக தெரியவருகின்றது. அவர், நாடு திரும்பிய பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்வாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மங்கள சமரவீர எம்.பி, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் இணைங்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதேவேளை ஜனாதிபதிக்கும் மங்கள சமரவீரவுக்குமிடையிலான இரகசிய சந்திப்பு கடந்த 3ம்திகதி இரவு மொரட்டுவையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சென்னையில் நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் மாநாட்டில் இன்று தலைமை தாங்கவுள்ளார். சென்னை வித்தியோதயா பள்ளியில் இன்றுமுற்பகல் இடம்பெறவுள்ள நிகழ்வில் பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல் என்ற தொனிப்பொருளில் வட மாகாண முதலமைச்சர் உரையாற்றவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தரணிகள் மாநாட்டில் பங்கேற்கும் முகமாக இலங்கையிலிருந்து நேற்று முன்தினம் வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் இந்தியா புறப்பட்டுச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்தயில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 40 வயதான பெண்ணொருவரின் சடலமும் 09 வயது சிறுமியொருவரின் சடலமும் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும்பணி 12ஆவது நாளாக இன்றுகாலை மேற்கொள்ளப்பட்டபோதே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் அப்பகுதியிலிருந்து மாடொன்று இறந்தநிலையில் மீட்கப்பட்டதுடன் இதுவரை 14 சடலங்கள் அப்பகுதியிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகளை இடைநிறுத்துவது தொடர்பில் மக்களின் கருத்துக்களை இடர் முகாமைத்துவ அமைச்சர் எழுத்து மூலம் கோரியிருக்கின்றார்.
மீரியாபெத்த மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுகொள்ள முடியாதெனில், மண்சரிவின் மீட்பு பணிகளை தொடர வேண்டும் என மீரியாபெத்த மக்கள் கோரியுள்ளனர். ஒருமாத காலத்தில் மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை பெறமுடியும் என தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே மீட்புப் பணிகளை நிறுத்துமாறு கோரியதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 2 வருடங்களேனும் செல்லும். இதனால் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட நிதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், இந்த மீட்பு பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் மீட்பு பணிகளுக்கு பொறுப்பான மத்திய மாகாண படைப்பிரிவின் தளதிபதி மனோ பெரேரா கூறுகையில், இராணுவத் தலைமைகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் மீட்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.