Header image alt text

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை – ருவன் வணிகசூரிய

ruwan(1)இலங்கையில் பயங்கரவாதம் மீண்டு நிலவுவதற்கான நிலைமை உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இலங்கையில் மட்டுமன்றி 13 நாடுகளில் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்படுகின்றபோதும் இலங்கையில் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை. கடந்த 3 தசாப்த காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நாட்டிலிருந்து ஆயுத ரீதியலான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் வாழும்  சிலரால் பிரிவினைவாதம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் இன்னுமொரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள சிலர் குழுக்கள் செயற்படுகின்றனர். எனினும் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கோ, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளுக்கோ இராணுவம் ஒருபோதும் இடம்தராது என்றார் இராணுவபேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

6 மாகாணங்களில் அதிக மழை வானிலை அறிக்கை

1a(6)அவதான திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும்;. தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரும் என எதிர்பார்ப்பதாக் தெரிவித்துள்ளது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக காலி வரை வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.அதன்போது இந்த கடற்பகுதிகளில் அலையின் வேகம் அதிகரிக்ககூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கொழும்பு தேசிய அரும்பொருட்காட்சியகத்துக்கு அருகில் மரமொன்று முறிந்து விழுந்ததை தொடர்ந்து, அந்த அரும்பொருட்காட்சியகம் மற்றும் தாமரைத்தடாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலையகத்திலும் காலநிலை அயாயம் தொடர்கின்றது.

வடமாகாண சபையில் 5 பிரேரணைகள் நிறைவேற்றம்

northern_provincial_council1வடமாகாண சபையின் 19 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட 5 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட 7  பிரேரணைகள் சபையில் முன்வைக்கப்பட்டன. இதில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொண்டு வந்த ‘நீர் உயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான காணிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் மாந்தை உப்பு கூட்டுத்தாபன காணியை வழங்குமாறு மத்திய கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கோரும் பிரேரணை அடுத்த அமர்விற்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார். அதனை தவிர, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனின் 2 பிரேரணைகளும் ஒரே மாதிரியான பிரேரணைகளாக இருந்தமையால் அது ஒரு பிரேணையாக மாற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றைய அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 5 பிரேரணைகளும் பின்வருமாறு,

1. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் – விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரை கோருதல்.

2. வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் – முல்லதை;தீவு மாவட்டத்தில் அழிந்துபோயுள்ள 115 குளங்களை புனரமைத்து விவசாய, கமநல, கால்நடை வளர்ப்பிற்கு உதவ முன்வருதல்.

3. ஆளுங்கட்சி உறுப்பினர் வே.சிவயோகன் – வடமாகாணங்களிலுள்ள திணைக்களங்கள் அலுவலகங்களில் 2009 ஆம் ஆண்டு முதலான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊழல்களை கண்டுபிடித்து அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல்.

4.சிவயோகனின் இரண்டாவது பிரேரணையாக மாகாண ஒவ்வொரு அமைச்சுக்களிலும் கணக்காய்வு பிரிவுகளை தனித்தனியாக உருவாக்குதல்.

5.எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா – யாழ்.நல்லூர் சட்டநாதர் கோவிலில் அமைந்துள்ள மந்திரிமனை அமைந்துள்ள (9 பரப்பு) காணியை தனியார் வர்த்தக நோக்கத்திற்கான பாவனையிலிருந்து தடுப்பதற்கான நடவடிக்கையை வடக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.

மரண தண்டனைக் கைதிகளான இந்திய மீனவர்கள் விடுதலை

fishermendeathதமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த ஐந்து மீனவர்கள் தாக்கல் செய்த மேன் முறையீடு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
 மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் சிறையிலிருந்து விடுவித்துவிட்டதாகவும், அவர்களை இலங்கை குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் இலங்கை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், இந்த மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்ஹா விடுதலையான மீனவர்கள் தூதரகத்தில் சந்தித்தார் என்றும். விரைவில் அவர்களை இந்தியா அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் கூறியிருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி ‘மனிதநேய சமிக்ஞையாக’ இவர்களை விடுதலை செய்திருப்பது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஏற்கனவே நிலவும் உறுதியான மற்றும் பன்முகத்தன்மையுடைய இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று தூதரக செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்களின் வழக்கறிஞர் அனில் சில்வா, இலங்கை அரசியல் சட்டத்துக்கு அமைய, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் பேரிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 இதன்படி இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை முற்றாக நீக்கப்பட்டுள்ளதா? இல்லாவிட்டால் அந்த தண்டனை குறைக்கப்பட்டுள்ளதா? இது சம்பந்தமான விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

எங்கள் உறவுகளை விடுதலை செய்யாதது ஏன்?
இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டை தீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மற்றும் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரியிருக்கின்றனர்.
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்றும். இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும்போது ஆனால் எங்கள் உறவுகளை விடுதலை செய்யாதது ஏன்? அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை 
அவர்களை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது’