மன்னாரில் குடும்பஸ்தர் ரி.ஐ.டியினரால் கைது-

imagesமன்னார் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். பனங்கட்டுக்கோட்டைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ்(வயது-38) என்பவரே கைது செய்யப்பட்டவராவார். பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தனக்கு துண்டொன்றையும் தந்துள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். எனது கணவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று மன்னார் நீதிமன்றத்திற்கு சென்றார். விசாரணை நிறைவடைந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோது வெளியில் நின்றுக்கொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைதுசெய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், எனது கணவரை கைது செய்ததாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டுமெனவும் பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தனர். எனது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்தார். பின் திருமணம் முடித்து தற்போது குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவர்; கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது மனைவி மேலும் கூறியுள்ளார்.

அச்சுவேலி முக்கொலை சந்தேகநபர் தற்கொலை முயற்சி-

யாழ். அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர், நேற்று நள்ளிரவு மருந்து வில்லைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சந்தேகநபர், கடந்த மே மாதம் தனது மனைவி, மாமியார், மனைவியின் சகோதரி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது வாளால் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் மூவர் பலியான நிலையில், இருவர் காயமடைந்தனர். இதனையடுத்து அச்சுவேலிப் பொலிஸாரால் சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் சிறையில் இருந்தபோது, ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அப்போது வழங்கப்பட்ட மருந்து வில்லைகளை உட்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபரை யாழ். சிறைச்சாலை காப்பாளர்கள் சிறை அத்தியட்சகரின் அனுமதியுடன், வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

யாழில் அடையாள அட்டையின்றி 46,000 பேர்-

யாழ்ப்பாணத்தில் தேசிய அடையாள அட்டை அல்லாதவர்கள் 46 ஆயிரம் பேர் இருப்பதாக, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் நேற்று தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டிற்கான வாக்களார் இடாப்பிற்கான பி.சி படிவம் நிரப்பப்பட்டு, 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 46 ஆயிரத்து 838 பேர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பதுடன், 7 ஆயிரத்து 126 பேர் தவறான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில், அடையாள அட்டை இன்றியும், தவறான அடையாள அட்டை வைத்திருப்பவர்களாக 53 ஆயிரத்து 964 பேர் யாழ். மாவட்டத்தில் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

மக்களின் சொத்துக்களை தமதாக்குவது நியாயமற்றது-சீ.வி.கே.சிவஞானம்-
1995, 1996ம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்களால் யாழ். வங்கிகளில் விட்டுச் செல்லப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு காரணமாக அரச மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட மக்களின் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்தே இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மக்களால் கைவிடப்பட்ட சொத்துக்களை வங்கிகள் தமதாக்கிக் கொள்வது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை, இலங்கைக்கு பாதிப்பில்லை-

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தோனோஷியாவின் கிழக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இப் பகுதியை சூழ 300 கிலோமீற்றர் தூரத்திற்கு அசூர அலைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. இதேவேளை 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமித் தாக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் 250,000 பேர் வரையில் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு-

உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். இதன்படி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 7,000 இருந்து 20,000 வரையும் பிரதி நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 10,000 இருந்து 25,000 வரையிலும் நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 15,000 இருந்து 30,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலர் திருமலைக்கு விஜயம்-

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய, இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, திருகோணமலை பொலிஸாரினால், கடற்கரை முன்றலில் அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அன்ரனி மார்க், ஆகியோரின் வழிநடத்தலில் பொலிஸ் அத்தியட்சகர் சிறிலால் தலைமையில் இவ் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. திருகோணமலை தலைமையக பொலிசாருடன் இணைந்து விசேட அதிரடிப்டையினரும் இவ் அணிவகுப்பில் பங்கு கொண்டிருந்தனர்.