சுன்னாகம் நிலத்தடி நீர் குறித்த சந்திப்பு

jaffna_waterயாழ் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்த கழிவு எண்ணெய் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற சுன்னாகம் நிலத்தடி நீரில் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு இல்லையென்று மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வடமாகாண ஆளுனர் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகிய முக்கியஸ்தர்களின் தலைமையில் யாழ் அரச செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம் ஒன்றில் இந்த நிலத்தடி நீர் விவகாரம் குறித்து சுமார் 3 மணித்தியாலங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.அதேநேரம் பலதரப்பட்ட மாசுகள் நீரில் கலந்திருக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் எனவே, அது குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பது தொடர்பாக எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எந்த அளவிற்கு நீர் மாசடைந்திருக்கின்றது, அதன் உண்மையான நிலை என்ன என்பது பற்றி, ஆராய்வதற்காக வடமாகாண சபை நிபுணர் குழுவொன்றை நியமித்து, ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும் வடமாகாண சபையின் நடவடிக்கைகளில் அதிருப்தி வெளியிட்டு, நிலத்தடி நீரைக் குடிக்கலாமா இல்லையா என்பதை வடமாகாண ஆளுனர், முதலமைச்சர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் உடனடியாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, யாழ் அரச செயலகத்தில் இந்த உயர்மட்ட கூட்டம் கூடி நிலைமைகளை ஆராய்ந்திருக்கின்றது. மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்ற நிபுணர்குழுவினர், மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். ஆயினும் செய்தியாளர்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

ஒரு பிழையான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே சில விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் மூலம் தெரியவந்துள்ளதாகவும, நீரில் உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய ஹைட்ரோ காபன் அங்கு நீரில் இல்லையென்று கண்டறியப்பட்டிருப்பதாகவும், ஆனால் ஏனைய மாசுகள் இருப்பதாகவும், இறுதி ஆய்வு அறிக்கை வரும் வரையில் பொறுத்திருக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் விபரம் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மேலதிகமாக நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வழி செய்யப்பட்டிருப்பதுடன், யாழ் மாவட்டத்தின் நீர் நிலைகளில் உள்ள நீரைப் பயன்படுத்துவது தொடர்பில் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்த தரப்பினருடைய கருத்தை உடனடியாகப் பெற முடியவில்லை (BBC)செய்தி