Header image alt text

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை

saliya peirisஅரசியல் பேதங்களை மறந்து 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ், இலங்கை அரசியலில் சுபீட்சமான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் சிறந்த ஆட்சிக்காகவும், 19வது அரசியலமைப்பு திருத்தம் அத்தியாவசியமானது என்று சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு விசேட கல்வி வலயங்களாக பிரகடனம்-

kilinochi mullaitivuகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளினது உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படவுள்ளன. அத்துடன், சிவில் பாதுகாப்பு பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டு, நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கதாகும்.

சோமவன்ச அமரசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்-

somawansaஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு விசுவாசமுள்ள அரசாங்கமொன்றை அமைக்கத் தாம் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் மேடைகளில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தார்மீகப் பொறுப்புடைய அரசாங்கத்தை உருவாக்குவதே எமது இலக்காகும். எம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் தலைமைத்துவம் குறித்து எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்மேளனக் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கவுள்ளோம். ஆயினும், நாட்டிலுள்ள பிரதான கட்சிகளுக்கு எந்த வகையிலும் எம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள கட்சி ஆதரவு தெரிவிக்காது என்று சோமவன்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்றவர்களுக்கு எலக்ட்ரோனிக் அடையாள அட்டை-

oldageஓய்வு பெற்றவர்களுக்கான எலக்ட்ரோனிக் அடையாள அட்டை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அடையாள அட்டைகள் 1960ஆம் ஆண்டிலிருந்து பாவனையில் உள்ளன. ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துவதற்காக, நவீன தொழில்நுட்பத்துடனான புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம், காப்புறுதி தவணைக் கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களை எதிர்காலத்தில் எலக்ட்ரோனிக் அடையாள அட்டையின் மூலம் செலுத்த முடியும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வூதியம் மாத்திரமன்றி, விதவைகள் மற்றும் தபுதாரர் கொடுப்பனவுகள் உட்பட சகல நவீன கொடுக்கல் வாங்கல் வசதிகளையும் எலக்ட்ரோனிக் அடையாள அட்டையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வனவாட்டுவுக்கு இலங்கை நிதியுதவி-

vanavattuwaசூறாவளியினால் பாதிக்கப்பட்ட வனுவாடு குடியரசுக்கு இலங்கை அரசாங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான பதில் உயர்ஸ்தானிகர் பி. செல்வராஜ். கென்பராவில் அமைந்துள்ள வனுவாட்டு உயர்ஸ்தானிகரை சந்தித்து இந்நிதிக்கான காசோலையை வழங்கியுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட இந்நிதியுதவியை பாராட்டிய வனுவாட்டு உயர்ஸ்தானிகர் இருநாடுகளுக்கிடையிலான உறவு மேலும் மேம்பட இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவித்திருந்தார். வனுவாட்டுவில் கடந்த மாதம் இடம்பெற்ற வெப்ப மண்டல சூறாவளியில் 90 வீதமான வீடுகள் அழிவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்-

ranil-mathriபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று காலை 07.40 அளவில் இந்தியாவின் கொச்சின் நகர் நோக்கி அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும் பிரதமருடன் மேலும் சில பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு ரணில் விக்கிரமசிங்க இன்று சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக கோவில் நிர்வாகத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தன.

முன்னாள் போராளியை காணவில்லை என முறைப்பாடு-

missingமுன்னாள் போராளியான ஆசிரியரை காணவில்லை என யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மணிவண்ணண் என்பவரையே இவ்வாறு காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது. குறித்த நபர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என்றும் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்றும் இன்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சுன்னாகம் பொலிஸார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ டிரக் விபத்தில் 17 இராணுவத்தினர் காயம்-

accidentஇராணுவ டிரக் வண்டியும் டிரக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து ஹிரிதலேயை நோக்கி பயணித்துகொண்டிருந்த இராணுவ டிரக் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வளலாய் பகுதியில் வெடி பொருட்கள் அபாயம்-

valalaaiயாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய தாம் வெடி பொருட்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மக்கள், கடந்த மாதம் வளலாய் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அப்பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து சொந்த இடங்களில் மீள்குடியேறி வருகின்றார்கள். தாம் காணிகளை துப்பரவு செய்யும் போது வெடிபொருட்கள் காணப்படுவதனால் தாம் அச்சத்துடனேயே துப்பரவு பணிகளை மேற்கொள்வதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். எமது காணிகளை துப்பரவு செய்யும்போது வெடிக்காத நிலையில் எறிகணைகள், துப்பாக்கி ரவைகள் போன்ற வெடிபொருட்கள் காணப்படுகின்றன. நேற்று காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரியூட்டும்போது அதனுள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. கடற்தொழிலுக்கு செல்லும் வழியில் 5 எறிகணைகள் கடலினுள் காணப்படுகின்றது. அது தொடர்பில் வெடிபொருள் அகற்றும் பிரிவுக்கும் இராணுவத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் வந்து பார்த்து ஒரு வார காலமாகியும் அதனை அகற்றவில்லை. இதனால் கடலுக்குப் போக முடியவில்லை. எனவே, மீள்குடியேறியுள்ள பகுதிகளில் உள்ள வெடி பொருட்களை அகற்றி அச்சமின்றி வாழ வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர தேர்தல் முறை மாற்றம் துரோகச் செயலாகும்-மனோ கணேசன்-

manoஇந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேவை பட்டியலில் முன்னுரிமை கொண்ட விடயம் அல்ல. உண்மையில் இது அதிகமாக தேவைப்பட்டது சில பெரும்பான்மை கட்சிகளுக்கும், சில பெரும்பான்மை சமூக அமைப்புகளுக்குமே. இதை நாம் புரிந்துக்கொண்டு, தேச நலன் கருதியும், ஐக்கியம் கருதியும் விட்டுக் கொடுப்புகளுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க உடன்பட்டோம். இவ்விதம் புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும், புதிய அரசாங்கத்தையும் உருவாக்க பெரிதும் துணை வந்த எமக்கு இன்று துரோகம் இழைக்க பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற சில சக்திகள் திட்டமிடுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேர்தல் முறை மாற்றத்தை சட்டமூலமாக அவசர, அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது. இந்த அவசரம் இன்று அரசில் இணைந்துக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிவிற்கே இருக்கின்றது. இது தொடர்பில் ஒரு அமைச்சரவை ஆவணத்தை இவர்கள் அமைச்சரவையில் சமர்பிக்க முயல்கிறார்கள். இதை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள கூடாது. இதை அமைச்சரவையில் உள்ள சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களும், தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு இடம்பெறும் சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து எமது ஒருமித்த முடிவையும், அடுத்த கட்ட நடவடிக்கையும் தீர்மானிக்க திட்டமிட்டுள்ளோம்.

Read more

சோமவன்ச -தேர்தல் ஆணையாளர் சந்திப்பு

soma-wansaபுதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவன்ச அமரசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கட்சிக்கான சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்

சோமவன்சவை தடுக்க, ஜே.வி.பி பிரயத்தனம்

JVPமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவன்ச அமரசிங்கவை மீண்டும் கட்சிக்குள் இணைந்துகொள்வதற்கு தேவையான சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின்  அரசியல் சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கட்சியில் தான் வகித்த சகல பதவிகளிலிருந்தும் நேற்று வியாழக்கிழமை இராஜினாமா செய்த சோமவன்ச அமரசிங்க, புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்.
இந்நிலையில், கட்சி தொடர்பில் கிளம்பியுள்ள வதந்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தள்ளார்.

19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

19அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள், இன்று வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் சிலவற்றை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்காக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தத்துக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
19ஆவது திருத்தத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்து, அதுதொடர்பில் சபாநாயகருக்கும் அறிவித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித்தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளனர்.

மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு – தயான்

thajanஇலங்கையின் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா பொருத்தமில்லாத நாடு என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் செல்வாக்கு செலுத்துவதாலும் இந்தியாவுக்கு இந்த தகுதி இல்லையென அவர் கூறியுள்ளார்.

இலங்கை போரில் இந்திய அமைதிப்படை கொடூரமாக செத்துக்கொண்டிருந்த போதுகூட சென்னையின் அழுத்தம் காரணமாக புலிகளை முழுமையாக அழிக்க இந்திய அரசாங்கம் முயலவில்லை என ஜயதிலக்க மேலும் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை கண்டித்துள்ள ஜயதிலக்க, இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும் இலங்கையை காப்பாற்ற முடியாதென கூறினார்.

இந்த வகையில், தேர்தல் முக்கியத்துவம் உள்ள தமிழ் குடிவரவாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டியுள்ள சில மேற்கத்தேய நாடுகளும் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தகுதியில்லாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் தாம் எதிர்பார்க்கும் பொதுவான அரசியல் தீர்வை ஆயர் தலமையில் வெளியிட வேண்டும் – வடமாகாண முதலமைச்சர்

vikiபுலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர் இவ்வாறு கூறினார்.            அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், Read more

யாழ். கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களின் அஞ்சலிக் கூட்டமும், புதிய பிரதம குருக்கள் நியமனமும்-(படங்கள் இணைப்பு)

kailasanathar08யாழ்ப்பாணம் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களாக ருந்த மணிக்குருக்கள் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரக் குருக்களின் அஞ்சலிக் கூட்டமும், கைலாசநாதர் கோவிலின் புதிய பிரதம குருக்களை நியமிக்கும் வைபவமும் கடந்த 11.04.2015 அன்று ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. ந்த வைபவத்தில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. என். வேதநாயகன் அவர்களும் விசேட அதிதிகளாக பிரதம குருக்கள், சிவாச்சாரியாகர்கள் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டு மணிக் குருக்களின் சேவைகளையும், சமூகப் பணிகளையும், அவருடைய ஆன்மீகப் பணிகளையும் எடுத்துக் கூறினார்கள். அத்துடன் புதிய பிரதம குருக்களாக குருசாமிக் குருக்களின் வைபவரீதியிலான நியமனமும் டம்பெற்றது. வ் வைபவத்தில் ந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக மணிக்குருக்களின் சகோதரர் கோபாலசர்மா அவர்களும் கலந்துகொண்டிருந்தார். Read more

வலி வடக்கில் இரண்டாம் கட்டமாக காணிகள் கையளிப்பு..!! (படங்கள் இணைப்பு)

kadduvan07வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வலி வடக்கில் இராணுவம் வசம் இருந்த பொது மக்களின் காணிகளில் ஒரு பகுதி (13.04.15) கடந்த திங்களன்று தெல்லிப்பளையின் வறுத்தலைவிளான் பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமது இடங்களை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டனர்.
எனினும் இன்று கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட தைஜிட்டி தெற்கு, மயிலிட்டி, வீமன்காமம் போன்ற பிரதேசங்கள்  இன்னும் கையளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதே நேரம் கையளிக்கப்பட்ட தங்கள் இடத்தை பார்வையிட்ட போது பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். அவர்களுடைய வீடுகள் இருந்த இடமே தெரியவில்லை மேலும் பாடசாலைகள், கோயில்கள் எல்லாம் அழிந்து அவர்கள் வாழ்ந்த ஊர் காடாய் காட்சியழித்தது. நமது போர் தந்த வடுவும் அதன் எச்சமும் Read more

சுன்னாகம் நிலத்தடி நீர் குறித்த சந்திப்பு

jaffna_waterயாழ் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்த கழிவு எண்ணெய் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற சுன்னாகம் நிலத்தடி நீரில் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு இல்லையென்று மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வடமாகாண ஆளுனர் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகிய முக்கியஸ்தர்களின் தலைமையில் யாழ் அரச செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம் ஒன்றில் இந்த நிலத்தடி நீர் விவகாரம் குறித்து சுமார் 3 மணித்தியாலங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. Read more

new year2

வலிகாமம் பகுதியில் 30 கிணறுகளில் எண்ணெய் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

wellஇலங்கை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினரால் கடந்த மாதம் வலிகாமம் பகுதிகளில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் உள்ள 30 கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிறீஸ் என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்பட்டு குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இப்பரிசோதனைகள் அனைத்தும் இலங்கையிலேயே நம்பகத் தன்மையானதும் சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதுமான அரசாங்க பகுப்பாய்வு நிறுவனத்தில் நடாத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியினால் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பரிசோதிக்கப்பட்ட 30 கிணறுகளிலுமே எண்ணெய் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 3 கிணறுகளில் அதிக செறிவில் காணப்படுகின்றது. மேலும் அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இக் கிணறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாகவே உள்ளுர் அதிகாரிகளால் நடாத்தபட்ட சில ஆய்வுகளில் எண்ணெய் தொடர்பான நச்சுப் பதார்த்தங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டதும் இதனை அடுத்து மக்கள் தங்கள் கிணற்று நீரினைப் பாவிக்கலாம் என அறிவிக்கப்பட்டதும் அறிந்ததே. இதனை விடவும் 2014 ம் ஆண்டு நீர்வழங்கல் அதிகார சபையினரால் பாரிய அளவில் முறையாகச் செய்யப்பட்ட ஆய்வில் 75 வீதமான கிணறுகளில் அதிகளவில் எண்ணெய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

usa sriஅண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளா டொம் மாலினோவ்ஸ்கீ இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ரஸ்ய தூதுவரை கைதுசெய்ய இலங்கை மேற்குலக புலானய்வு அமைப்புகளின் உதவியை நாடியுள்ளது.

veerathungaஸ்சியாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கண்டுபிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்குலக நாடுகளின் புலானய்வு அமைப்புகளின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதா? என்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கேட்டறிந்துகொள்ளுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதவிற்பனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உதயங்கவை கண்டுபிடிப்பதற்கு மேற்குலகின் உதவிநாடப்பட்டுள்ளதாக பிரதிவெளிவிவகாரஅமைச்சர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான அவரை விரைவில் கைதுசெய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை உதயங்க குறித்து இலங்கை ரஸ்சியாவிடமிருந்து விபரங்களை கோரவில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை உதயங்கவை தேடி சர்வதேச வேட்டையொன்றை நடத்துவதற்கு இலங்கையிடம் உரிய வளங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள் மேற்குலக நாடுகளால் அவரை இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் உக்ரைன்கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களை வழங்கியவர் என்பதால் அவர் எங்கிருக்கின்றார் என்பது மேற்குலக நாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

 இலங்கையில் தாமரைக் கோபுரம் சீன இலத்தரனியல் உளவு காவலரண் – இந்தியா

kopuramஇலங்கையில் நிர்மானிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம் சீன இலத்தரனியல் உளவு காவலரணாக செயற்பட உள்ளதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் சீன உதவியுடன் தாமரைக் கோபுரம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தந்திரோபாய நிபுணர் அக்ஸர் ரோய் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய ஆய்வுக்குழு (SAAG) வின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் இந்த விபரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. Read more

சு.க.வின் மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்டோர் வழக்கு

SLFPசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும், மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மத்தியகுழுவிலிருந்து சட்டவிரோதமான முறையிலேயே தாங்கள் ஐவரும் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆகையால் மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எஸ்.எம். சந்திரசேன, டி.பீ. ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகிய ஐவருமே நீக்கப்பட்டனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள், மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தனது தீர்மானம் குறித்து மீளாய்வு செய்வார் என டி.பி.ஏக்கநாயக்க

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீள இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். ஏற்கனவே வகித்து வந்த பதவிகள் மீள அளிக்கப்பட உள்ளதாகவும். மத்திய செயற்குழுவிலிருந்து நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதி மீளாய்வு செய்ய உள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தம்மிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார். மீண்டும் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்க முடியும் என டி.பி.ஏக்கநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார

ஜனாதிபதி-பிரதமருக்கு இடையில் வெள்ளி சந்திப்பு

ranil-mathriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் நிறைவேற்ற வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வலியுறுத்துவதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது