Header image alt text

இனியொரு யுத்தம் ஏற்படாது-பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா-

sarath fonsekaஇந்நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது. இருந்த இருளைப் போக்கி புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீமகா போதியில் தான் பிரார்த்தித்துக் கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பொன்சேகா, அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாம் தற்போது புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இப்புதிய அரசாங்கம், நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. யுத்த வெற்றியை பங்கிட்டுக்கொண்டு அதன்மூலம் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்ட எவரும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை அபிவிருத்திசெய்ய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. மதங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் உருவாக்க வேண்டும். சந்தேககங்களுக்கு இடமளிக்கக் கூடாது. விசேடமாக, இந்நாட்டில் இனி யுத்தமொன்று ஒருபோதும் இடம்பெறாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்லை என பொன்சேகா, இதன்போது மேலும் கூறியுள்ளார்.

சித்தண்கேணி இளைஞர் முன்னேற்றக் கழகத்திற்கு மின் விளக்குகள்-

ainkaranவலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் அழைப்பின் பெயரில் கடந்த 20.05.2015 அன்று வலி மேற்கு பிரதேசத்திற்கு வருகை தந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கள் சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேசத்தில் மின் விளக்குகளை பொருத்தும் பொருட்டு வீதி மின் விளக்குகளை அன்பளிப்பாக வழங்கினார். இவ் நிகழ்வு கழகத்தின் தலைவர் செல்வன் ப.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் தற்போதய உறுப்பினருமான ஜெபநேசன் மற்றும் கழக உறுப்பினர்கள் கிராமத்தவர்களும் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் சந்திப்பு-

tna (4)தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது புங்குடுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தை அடுத்து இடம்பெற்று ஆர்ப்பாட்டங்களால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாகவும் இதன்போது பேசப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு இடமில்லை: ஜனாதிபதி மைத்திரிபால-

maiththiriஇலங்கை இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இன்று குறிப்பிட்டுள்ளார்.

புங்குடுதீவு சம்பவம், விசாரணைக்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்-

policeபாடசாலை மாணவி வித்தியாவில் படுகொலை சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் மூன்று நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த மாணவின் படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுத்துறையும் பிரதேசத்தின் பதற்றநிலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் ஒட்டுமொத்த சம்பவங்கள் குறித்து பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவும் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. யாழ்ப்பாணம் இப்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, நேற்றும் இன்றும், எந்த ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

தேசியக் கொடி குறித்த புதிய சட்டத்திற்கு அங்கீகாரம்-

national flagதேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய இதுவரை காலமும் தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பில் நடைமுறையில் இருந்த விதிமுறைகள் சட்டமாக்கப்படவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கள் பெரேரா தெரிவித்துள்ளார். தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதனை மீறினால் அனுபவிக்க நேரிடும் தண்டனைகள் தொடர்பான யோசனைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதற்காக இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தின் ஆலோசனைகளும் பெறப்படவுள்ளன. புதிய சட்ட நடைமுறையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின் தேசியக் கொடியின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதனை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் முற்றாக தடுக்கப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக கோலித குணதிலக்க-

golithaபாதுகாப்பு படைகளின் பிரதானியாக விமானப்படையின் தற்போதைய தளபதி ஏயார் மார்ஷல கோலித குணதிலக பதவியேற்கவுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானியாக தற்போது பதவிவகிக்கும் முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய அடுத்த வாரத்தில் ஓய்வுபெறவுள்ளார். அவரது பதவிவெற்றிடத்திற்கே கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஏயார் மார்ஷலாக உள்ள கோலித குணதிலக்க ஏயார் ஷீப் மார்ஷலாக பதவியுயர்த்தப்படவுள்ளார். ஜகத் ஜயசூரிய பிரேஸிலுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்-

shotயாழ். வடமராட்சி கிழக்கில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடுத்துறைப் பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதனைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுத்துறை, 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலன் சிவபாதசுந்தரம் (வயது-56 ) என்பவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மந்திகைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணிக்கற்கலை கடத்தியவர் கைது-

stone97 லட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்க கற்களை கடத்த முயற்ட்ட இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணிக்க கற்களை அவர் டுபாயிற்கு கடத்த முற்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 200 கரட் நிறைகொண்ட இவை, சிகரட் பொதிகளில் மறைத்து வைத்து கடத்த முற்பட்டுள்ளார். அவர் தற்போது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு கொடூர செயல் வரலாற்றுத் துயரமே-கலாநிதி குமரகுருபரன்-

kumaraguruparanவித்யாவின் கொடூரமான கொலை பெரும் துயரமிக்கது, மிருகத்தனமானது. கிருஷாந்தி, இடா கமலிற்றா, சாரதாம்பாள் போல இன்னும் பலர் அரசபடைகளின் கையில் மரணித்தபோது ஆத்திரமடைந்தோம், வெகிண்டு எழுந்தோம். ஆனால் இன்றோ நம் தமிழர் நடாத்தியிருக்கும் இந்த நாயினும் கேடாம் நிலைகண்டு அதிர்ச்சியடைந்தேன். ஓர் தமிழனாக வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. தமிழனே இப்படியொரு கேடுகெட்ட செயலை செய்திருப்பது தான் வரலாற்றுத் துயரம். என ஜனநாயக தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்குரிய தண்டனையை நீதிமன்று வழங்காமல் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அந்த எண்ணத்தை அமைதியான முறையில் பொலிசார் நியாயமாக நடக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி . ஆர்ப்பரித்திருப்பது நியாயம். அதை விடுத்து எதோ பொலிசாரும் நீதி மன்றும் தீங்கிழைத்தது போல தமிழர்களாகிய நாங்கள் கல்வீசி நீதிமன்று எனும் எமது சொத்தையே தாக்குவது எந்தவகையில் நியாயமாகும் பண்பாகும். எம்மை திட்டமிட்டு பயங்கரவாதிகளாக சித்தரிக்கவென ஒரு கூட்டம் காத்திருக்கின்றது.

Read more

தமிழக முதல்வராக ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் பதவியேற்பு-

jeyaதமிழ் நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா 5ஆவது முறையாக இன்று மீண்டும் பதவியேற்றுள்ளார். ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்றுகாலை 11 மணிக்குத் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், ஜெயலலிதாவைத் தொடர்ந்து, 28 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இத் தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர் மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உட்பட 4 பேரையும் கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தார் இத்தீர்ப்பையடுத்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கின. இதனால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா நேற்றையதினம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கத்து.

இலங்கை – ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு-

forign minister metவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஃப்ரேங் வால்டர் ஸ்ரெயின்மெரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் பேசப்பட்டுள்ளது. இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்துதல், மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச சமுகம் மற்றும் அமைப்புகளுடன் சுமூக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இலங்கையின் முயற்சி குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீரவினால் விளக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக துறை சார்ந்தவைகள் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டமை, அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பல நீக்கப்பட்டுள்ளமை, மற்றும் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் பற்றியும், வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கையர்கள் மீளழைக்கப்பட்டுள்ளமை பற்றியும் அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

யாழில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடை-

jaffna courtsயாழ் மாவட்டத்துக்குள் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ அல்லது பேரணிகள் செல்லவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தை அடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து பிரதேசங்களிலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன. இவ்வார்ப்பாட்டங்கள் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்தின் சில பிரதேசங்களுக்கும் கூட வியாபித்திருந்தன. இதனால், யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலை கடந்த சில தினங்களாக பெருமளவில் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியது என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸி. அகதிகள் வேறு முகாமிற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு-

australiaஅவுஸ்திரேலியாவினால் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சிலர், அங்குள்ள கிழக்கு லோரென்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு மாற்றப்படவுள்ளனர். எனினும் இதற்கு அகதிகள் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. 506 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 289 அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்து கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அகதி அந்தஸ்த்து கிடைக்கும் வாய்ப்புள்ள 289 பேரே குறித்த முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் 20 பேரை தவிர ஏனையோர் அந்த முகாமிற்கு செல்ல மறுத்துள்ளனர். இந்த நிலையில் முகாமிற்கு செல்ல மறுக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பப்புவா நியு கினி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அகதிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், முகாம்களுக்கு மாற ஒத்துழைக்காதவர்களுக்கான மருத்து, தொலைபேசி மற்றும் இணையம் உள்ளிட்ட வசதிகள் மட்டுப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டம்-

trincoபுங்குடுதீவு மாணவியின் வன்புணர்வு படுகொலையைக் கண்டித்து திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ள மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் காலை 8.30 அளவில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளனர். புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகளை வலியுறுத்தியும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தனர். இதேவேளை, முற்றவெளி மைதானத்திலிருந்து பேரணியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டக்கார்கள் செல்வதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர். மைதானத்திற்குள் மாத்திரம் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபடுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.

அரசியலமைப்பு சபையை உருவாக்கவும்-பெப்ரல்-

paffrelபொது தேர்தலுக்கு முன்னர் அரசியல் அமைப்பு சபை உருவாக்கப்பட வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள போதும், அதில் கூறப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சபை இன்னும் உருவாக்கப்படவில்லை. இது அதிருப்தியளிப்பதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குறைந்த பட்சம் தேர்தல் சுயாதீன ஆணைக்குழு, காவற்துறை சுயாதீன ஆணைக்கழு மற்றும் அரச சேவைகள் சுயாதீன ஆணைக்குழு ஆகியவற்றையேனும் நியமிக்க பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பஸ் தீக்கிரையானது, பயணிகள் அதிஸ்டவசமாக தப்பினர்-

bus fireகொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. காலி சமுத்ரா மாவத்தை பிரதேசத்தில் இன்றையதினம் பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பஸ் தீப்பற்றியபோது, அதனுள் 60 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பஸ்ஸின் பின் வாசலால் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த பஸ் தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. காலி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய வீட்டுத் திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை-

indian schemeஇந்திய வீட்டுத்திட்டத்திற்காக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியில் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் ரூபாய் பயனாளிகளின் கணக்குகளில் இடப்படுகிறது. இதனைக் கொண்டு தங்களுக்கான வீட்டை அவர்கள் நிர்மானிக்க வேண்டும். எனினும் அதிகரித்துள்ள செலவுகளால் இந்த தொகை போதாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 ஆயிரம் வீடுகள் இன்னும் 7 மாதங்களில் தயாராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசமிகளின் பொய்ப்பிரச்சாரம் – கண்டிக்கிறது புளொட் (படங்கள் இணைப்பு)

ன்பார்ந்த தமிழ் மக்களே!

அரசியல் சுயலாபம் தேடும் மலினமான அரசியல்; செய்யும் பிரமுகர்களை அவர் சார்பு ஊடகங்களையும் மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .

புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என கைதாகியிருப்பவர் சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார்.
ஆயினும் மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படமாக எமது அமைப்பைச் சேர்ந்த திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் என்கின்ற சுவிஸ் ரஞ்சன் அவர்களின் புகைப்படத்தினை சில விசமிகள் பிரசுரித்திருக்கின்றார்கள் என்பதை இணையத்தளங்களிலும் சில முகநூல்களிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. Read more

வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்) அவர்களின் கன்னியுரை-

K.Sivanesan Bavanவடமாகாண சபையின் 28ஆவது அமர்வு நேற்றுவியாழக்கிழமை பகல் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக புதிதாக பதவியேற்றுள்ள புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. கந்தையா சிவனேசன்(பவன்) அவர்கள் தனது கன்னியுரையினை ஆற்றினார்.

அவர் தனதுரையில், 

மதிப்பிற்குரிய தவிசாளருக்கும், முதலமைச்சருக்கும் சக மாகாணசபை உறுப்பினர்களுக்கும் எனது முதற்கண் வணக்கங்கள்!.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அதன் அங்கத்துவக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பிலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களால் தமது பிரதிநிதியாக இச்சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள நான் இச்சபையின் ஒற்றுமையானதும் நியாயமானதுமான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன் என்பதனை முதலில் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

Read more

வடக்கின் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்-

police ...யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர, சீதாவாக்கபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.கே.ஜயலத் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர யாழ் மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.டி.வீரசிங்க கிளிநொச்சியில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் யு.ஏ.பி. பெர்னாண்டோ மன்னாரில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ. சேனாரத்ன யாழ் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ.டி.ஈ.எல். ரன்தெனிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். மேலும் ஊர்காவல்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கிவ்.ஆர்.பெரேரா, மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.ஆர்.கே.பி.பாலசூரிய வவுனியா பொலிஸ் பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.யூ.கே.வுட்லர் யாழ் தலைமையக பொலிஸ் பரிசோதகராகவும் இடமாற்றம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தாலி செல்வதற்கு முயன்ற யாழ். இளைஞன் கைது-

arrestஇந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் 34 வயதுடையவர் எனவும் யாழ். சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர், கடந்த 18ம் திகதி, போலி கடவுச்சீட்டை வைத்து சவூதி அரேபியாவுக்குச் சென்று வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், இந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினை எடுத்து அவருடைய புகைப்படத்தை ஒட்டி பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பிரதமருக்கு எதிராக 60 எம்.பி.க்கள் கையொப்பம்-

dalasபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 60பேர் கைச்சாத்திட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இதுவரை 60 எம்.பி.க்கள் கைச்சாத்திட்டுள்ளனர் என்று டலஸ் எம்.பி மேலம் குறிப்பிட்டுள்ளனர்.

ரவிராஜ் கொலை வழக்கு – விளக்கமறியல் நீடிப்பு-

ravirajதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் ஐவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டும் துப்பாக்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்த மாதிரிகள், டீ.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்கள் கூறினர். தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதன்படி குறித்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர்கள் ஐவரும் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரத லக்ஷ்மன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு-

courtsபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு, பிரதிவாதி ஒருவர் இல்லாமையால் அடுத்த மாதம் 11ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 28ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளை, அடுத்தகட்ட விசாரணைகளை இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாராத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபரில் கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் கொலையைக் கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்-

malaiyakaththilபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஹற்றன் சாமிமலை ஸ்டொக்கம் பாடசாலை மாணவர்களும், பிரதேச மக்களும் இணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலையிலிருந்து ஓல்டன் சாமிமலை பிரதான வீதி வரை பேரணியாக சென்று அங்கு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுபட்டனர். புங்குடுதீவில் நடந்தது சரியா?, காமுகர்களுக்கு தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும், இனியும் வேண்டாம் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வித்யாவின் கொலையைக் கண்டித்து கிழக்கில் ஹர்த்தால்-

hartalமட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுவரும் ஹர்த்தால் காரணமாக அந்தப் பகுதியின் இயல்பு நிலைமை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் காமவெறியர்கட்கு அதி உச்ச தண்டனை வழங்கக் கோரியும், குற்றவாளிகள் சார்பில் யாரும் வாதாடக்கூடாது எனவும் கோரியே இந்த ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த ஹர்தால் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வியாபார ஸ்த்தாபனங்கள், பாடசாலைகள் அரச தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கிகள், பொதுச் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் பதாதைகளும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரில் பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜிவ் காந்தியின் 24வது நினைவு தினம் (தீவிரவாத எதிர்ப்பு நாள்) அனுஸ்டிப்பு

rajeev gandiதமிழ்நாட்டில் 1991, மே 21ம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆண்டுதோறும் மே 21ம் தேதி தீவிரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவரின் 24வது நினைவு தினம் நேற்று இந்தியாவில் பல்வேறு இடங்களில் அனுஷ;டிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
இருப்பினும், காங்கிரசின் மூத்த தலைவராக இருந்தவரும், தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமித் அன்சாரியும், இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்கவில்லை.
‘மத்தியில் ஆளும் பாஜ அரசின் முடிவின்படி, குடும்பம் மற்றும் கட்சியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், ஜனாதிபதி பங்கேற்க கூடாது. இந்த அஞ்சலி கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்டதால், அதனை ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டார்’ என்று, ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

அமைச்சர்கள் நால்வர் பதவி விலகல்-

89888புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான அமைச்சர்கள் நால்வர் பதவி விலகியுள்ளனர்.. டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாராச்சி, சீ.பி ரத்நாயக்க மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர்கள் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். டிலான் பெரேரா வீடமைப்பு மற்றும் சமூர்த்தி ராஜாங்க அமைச்சராகவும், மகிந்த யாப்பா நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், சி பி ரட்நாயக்க அரச நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான ராஜாங்க அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி சுற்றாடல் ராஜாங்க அமைச்சராகவும் பதவிவகித்தனர். உள்ளுராட்சி சபைகளில் நிர்வாக காலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். இல்லையேல் தாம் எதிர்காலத்தில் மாற்று தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுவரும் என பிரதி அமைச்சர் டிலான் பெரோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

மாணவி படுகொலைச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்-

jaffna courtsயாழ். புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜூன் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மாணவி படுகொலை சம்பவம் தொடர்பில் முதலில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பபட்டனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதியுடன் 48 மணிநேர பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர் வெள்ளவத்தையில் சுவிஸ் பிரஜையும் கைதாகியுள்ளார். குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியதுடன் சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவியின் உடல் கூற்றும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது அத்துடன், சந்தேகநபர்கள் அனைவரும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பரிசோதனையில் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்படும் எவரும் தப்ப முடியாது. அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

மாணவி படுகொலையை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால், பரவலான கைதுகள்-

vavuniyaயாழ். புங்குடுதீவு மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஐக்கிய வர்த்தக சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் இதனை மேற்கொண்டிருந்தனர். மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில் பூரண கரத்தால் நடைபெற்ற வேளையில் பத்திரிகையின் ஊடகவியலாளர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முக்கியஸ்தர், மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் ஒருவர் உட்பட பலர் கைது செய்யபட்டு பின்னர் 11.30மணியளவில் விடுவித்ததாக தெரியவருகின்றது. இதேவேளை புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலும் இன்று முஸ்லிம் பெண்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்முறை தொடர்பில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-

ddfddநீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமை, சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணி வாகனம் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொருக்கப்பட்டமை, கல்வீச்சு தாக்குதல் நடாத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்த்தப்பட்டு நேற்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 129 பேரும் இன்றைய தினம் 3 கட்டங்களாக யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று யாழ். நீதிமன்றிற்கு ஆஜர்படுத்தப்பட்ட 129 பேரில் முதல் கட்டமாக கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 43 பேருக்கு எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி வரையும், 2ஆம் கட்டமாக கொண்டுவரப்பட்ட 39பேருக்கு 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதவான் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படல் வேண்டும்- புளொட்-

ploteபுங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

அப்பாவி மாணவி வித்தியாவின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை எந்த விதத்திலும் தப்பிக்கவிட முடியாது. குற்றவாளிகள் தப்புவதற்கு எவரும் எந்தவிதத்திலும் உதவகூடாது என்பதுடன் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிட இடந்தரக்கூடாது.

இத்தகைய மிலேட்சத்தனமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்காக வாதாடுவதற்கு முன்வரும் சட்டத்தரணிகள்கூட இவ்வாறான சமூகவிரோதக் செயல்களுக்கு துணை புரிபவர்களாகவும் அதனை ஊக்குவிப்பவர்களாகவுமே சமூகத்தால் கணிக்கப்படுவர்;.

இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய சட்டத்தரணிகள் எமது சமூகத்தின் நலன்கருதி வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து தங்களது முழுப்புலமையையும் செலுத்தி இலவசமாக வழக்காடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது, இன்று தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, பாலியல் துஷ்பிரயோகங்கள், போதைவஸ்து பாவனை போன்ற விடயங்களில் ஈடுபடுவர்களுக்கு ஒரு சரியான பாடமாக அமையும் என்பதுடன் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒரு ஆரம்பமாகவும் அமையும்.

இதேவேளை மாணவி வித்தியா மீதான பாலியல் வன்கொடுமையுடன் கூடிய படுகொலையை எதிர்த்து எமது மக்கள் எழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து நிற்பது நிச்சயமாக வருங்காலத்தில் இவ்வாறான சமூகவிரோதச் செயல்கள் நடைபெறாதிருப்பதற்கு ஒரு ஏதுவாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ஸ, விமல் வீரவன்ச ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு-

gotabaya......முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்குமூலமளித்துள்ளார். லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காகவே முன்னால் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரியவருகின்றது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று வாக்குமூலம் பதிவு செய்கின்றது. அவரது மனைவியான சஷி வீரவங்ச போலி கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தயாரித்தமை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சஷீ வீரவங்ச போலி கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை தயாரித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல், எராஜ் பெர்னாண்டோவுக்கு பிணை-

basilமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு இன்று கடுவல நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது நீதவான் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பொலிஸார் வசம் இருந்த சந்தேகநபர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் கைதுசெய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த வழக்கு இம் மாதம் 24ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கெஹலிய றம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை-

4565இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிதியத்தில் இருந்து 990,000 ரூபாவை செலவுசெய்து ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பி.ஐ பைப் 600 கொள்வனவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிதியை பயன்படுத்தியதால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது. நான்கு குற்றச்சாட்டுக்களின்கீழ் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு 24 சாட்சியாளர்கள், 15 ஆவணங்கள் கொண்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க, முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகே ஆகியோரை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய 50,000 ரூபா ரொக்க பிணையிலும் 25 லட்சம் பெருமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவித்து உத்தரவிட்டார். கெஹலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலியாவில் சிகிச்சைக்கு செல்வதால் ஏனைய இருவரினது கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீண்டும் செப்டம்பர் 2ம்திகதி விசாரணைக்கு வருகிறது.

சம்பூர் காணி பிரச்சினை தொடர்பில் உணவுத் தவிர்ப்பு-

sampurசம்பூர் பிரதேச காணி தொடர்பில் நேற்று முன்தினத்தில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தவராசா பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவித்து இன்று பொதுமக்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தவராசா பிரேம்குமார், சம்பூர் மக்களின் காணிப் பிரச்சினைக்கான உரிய தீர்வுகள் கிடைக்கும்வரை தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம், கண்ணீர்ப் புகை பிரயோகம்-

sfdddgfggg

யாழ். நீதிமன்ற வாளகத்தில் ஏற்பட்ட பதற்றநிலை பின்னர் சீர்செய்யப்பட்டுள்ளது. கண்ணீர் புகை பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையில் பொலிஸார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் பதற்றநிலை தணிந்ததாக கூறப்படுகின்றது. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளது. இதில் பொலிஸாரும் பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது யாழ், நீதிமன்ற கட்டடத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வாகனங்கள் சிலவும் உடைக்கப்பட்டுள்ளன இதேவேளை கொலைச் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்படுவது தெரிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. தோடர்ந்து படுகொலை குற்றவாளிகளை யாழ். நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது அங்கு வீதியின் அருகில் கூடியிருந்தவர்கள் நீதிமன்றத்தை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர். தோடர்ந்து விஷேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் யாழ் நீதிமன்ற வளாகத்துக்குள் குழப்பம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 20ற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் 50 பேர்வரை கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், கைதுகளின்போது 36 மோட்டார் சைக்கிள்கள், 27 சைக்கிள்கள், 2 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று வட மாகாணம் முழுவதிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டின் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்படுட்டுள்ளன. தனியார் போக்குவரத்து பஸ்களும் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

கண்டனப் பேரணி ,யாழ். பொலிஸ் நிலையம் முற்றுகை, மாவை சமாதானம், பத்தாவது நபர் தப்பியோட முயற்சி

viddiyaa_pro_011 yaal yaal01 viddiyaa_pro_003

 

 

 

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு நீதி கோரி யாழ்.நகரில் கண்டன பேரணி சென்றவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தை முற்கையிட முயன்றதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். நகரில் உள்ள அநேகமான பாடசாலை மாணவர்கள் வீதிகளில் இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 
பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் சென்று சமாதானம் செய்து வருகின்றார்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஒருவர் ஊடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து வித்தியா கொலை வழக்கில் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.