பொதுமக்களிடம் உதவி கோரும் மாவட்ட செயலகங்கள்-

wqewewddஇயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி அத்தியவசிய பொருட்களை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்ட செயலகம், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக பொதுமக்களிடம் உலர் உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார உதவிகளையும் கோரியுள்ளது. இவ்வாறு உதவிகளை வழங்குவதற்காக 071 352 70 36 மற்றும் 033 222 22 35 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என்று தெரரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புத்தளம் மாவட்ட செயலகமும் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 6000 பேர் 50 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் என்.எம்.எச். இந்திரானந்த தெரிவித்தார். அதன்படி புத்தளம் மாவட்ட செயலகத்தில் உதவிப் பொருட்களை ஒப்படைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உதவிகளை வழங்குவதற்காக 032 22 65 225 , 032 22 65 756 , 032 22 65 235 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார். இதேவேளை கேகாலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கேகாலை மாவட்ட செயலாளர் பொதுமக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு உதவிகளை வழங்குவதற்காக 035 2222 603 மற்றும் 035 2222 35 என்ற தொலைபெசி இலக்கங்களினூடாக தொடர்புகளை ஏற்படுத்துமாறு அந்த மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வனசூரிய கூறியுள்ளார். இதேவேளை இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால் அரச சேவையாளர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார். அனர்த்தம் காரணமாக எற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் சீராகும் வரை இந்த நடைமுறை அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண சேவை நடவடிக்கைகளின்போது உள்துறை அமைச்சினால் சரியான முறையில் சேவை இடம்பெறாவிட்டால் 1905 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர தேவைகளின் போது அழைப்பை ஏற்படுத்துவதற்கான தொலைபேசி இலக்கம் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அவசர தேவைகளின் போது 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.